Sunday, June 14, 2026
Latest:
விளையாட்டு

சகல துறையில் பிரகாசித்த இலங்கை; மேற்கிந்தியத் தீவுகளுக்கு பதிலடி கொடுத்தது

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் தீர்க்கமான இரண்டாவது போட்டியில், சகல துறையில் அசத்திய இலங்கை அணி 37 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்து தொடரை 1:1 என சவாலாக்கியது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றிருக்க, தொடரின் தீர்மானமிக்க 2 ஆவது போட்டி இன்று (14) இடம்பெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்கள் குவித்தது.

தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், நடுத்தர வரிசையில் களம் புகுந்த கமில் மிஷார பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் 61 ஓட்டங்களை விளாசினார். இறுதிப் பகுதியில் அதிரடியாக விளையாடிய முன்னாள் தலைவர் தசுன் ஷானக, வெறும் 24 பந்துகளில் 58 ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

இவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 100 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷமார் ஜோசப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட சவால்மிக்க 195 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி வெறும் 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் இலங்கை அணி 37 ஓட்டங்களால் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரை 1:1 என சவாலாக்கியது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 3.1 ஓவர்களில் வெறும் 9 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *