சீனன்கோட்டை பாடசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக ஆளுனர் ஹனீப் யூஸுப் உறுதி
மேல் மாகண ஆளுநர் ஹனீப் யூசுப் இன்று (04) செவ்வாய்க் கிழமை பேருவளை-சீனன் கோட்டைக்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.பிரபல இரத்தினக்கல் வர்த்தகரும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் நீண்ட கால நண்பருமான அல்ஹாஜ் அன்ஸார் யூசுப் அவர்களின் வாசஸ்தளத்துக்கு விஜயம் செய்த ஆளுநர் சினேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.ஆளுநர் அவர்களுடனான சந்திப்பில் பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர் அவர்களும் கலந்து கொண்டிருந்ததோடு, சீனன் கோட்டை அல்ஹுமைஸரா தேசிய கல்லூரி அதிபர் ஜே. பர்ஸான் மற்றும் சீனன் கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர்க் கல்லூரி அதிபர் பஹீமா பாய்ஸ் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்டு சீனன் கோட்டை ஆரம்பப் பாடசாலை உட்பட தமது கல்லூரிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, பெளதீகவளக் குறைபாடுகள் பற்றி எடுத்துக் கூறி அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் கலந்துரையாடினர்.ஆளுநர் ஹனீப் யூசுப் குறிப்பிட்ட மூன்று பாடசாலைகளின் அபிவிருத்திக்கும், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தன்னாலான கூடிய உதவிகளை அரசாங்கத்தின் மூலம் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததாகவும் நகரபிதா மபாஸிம் அஸாஹிர் தெரிவித்தார்.
(பீ.எம்.முக்தார்)
