வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் பெண் ஒருவர் படுகொலை தங்கொட்டுவையில் பரபரப்பு

தங்கொட்டுவை பிரதேசத்தையே உலுக்கியுள்ள அதிர்ச்சி சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை பதிவாகியுள்ளது. அமைதியான சூழலில் இயல்பு வாழ்க்கையைக் கழித்து வந்த மூதாட்டி ஒருவர், பட்டப்பகலில் சொந்த வீட்டுக்குள்ளேயே கூரிய ஆயுதத்தால் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் வடக்கு கோணாவில – கிராகார பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய திலானி தேவிகா (வயது 65) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இத்தம்பதியினரின் பிள்ளைகள் வெளிநாடான இத்தாலியில் தொழில் நிமித்தம் வசித்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் மாத்திரமே குறித்த வீட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியில் நடைபெற்ற இறுதிக்கிரியை ஒன்றிற்குச் சென்றுவிட்டு மாலையிலேயே இருவரும் வீடு திரும்பியுள்ளனர். வீடு வந்ததும் கணவர் அயலிலுள்ள வீட்டிற்குச் சிறிய தேவைக்காகச் சென்றுள்ளார்..
கணவர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற சில நிமிட இடைவெளியில், திட்டமிட்டு நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்துள்ளார். தனிமையில் இருந்த மூதாட்டியை எவ்வித இரக்கமுமின்றி கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்துத் தாக்கிவிட்டு அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
அயல் வீட்டிலிருந்து கணவர் திரும்பி வந்து பார்த்தபோது, தனது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். சம்பவ இடத்திலிருந்து பெண்ணின் கைப்பை மாத்திரம் காணாமல் போயுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப் பையிலுள்ள பணம் அல்லது பெறுமதியான பொருட்களைக் குறிவைத்து வந்த கொள்ளையன் இதனைச் செய்தானா, அல்லது இந்தக் கொலையின் பின்னணியில் வேறு ஏதேனும் முன்விரோதம் ஒளிந்துள்ளதா என்ற கோணத்தில் மர்மம் நீடிக்கிறது. சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதுடன், கொலையாளியைக் கைது செய்ய தங்கொட்டுவை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
