புத்தளம் முன்னாள் நகர சபை உறுப்பினர் 02 கிலோ கஞ்சாவுடன் கைது
தேர்தலில் போட்டியிட்ட பிரமுகரின் பகீர் பின்னணி: தில்லையடியில் சிக்கிய கேரளா கஞ்சா பார்சல்!
புத்தளம் தில்லையடிப் பகுதியிலிருந்து புத்தளம் நகருக்கு பெருமளவிலான கேரளா கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதையடுத்து, தில்லையடி வீதியில் வீதித்தடை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த மோட்டார் சைக்கிளை நடுவீதியில் மடக்கிப் பிடித்தனர்.
பொலிஸாரின் தீவிர சோதனையின்போது, குறித்த மோட்டார் சைக்கிளில் எவரும் எளிதில் சந்தேகிக்க முடியாதவாறு மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோகிராம் கேரளா கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன், வாகனத்தை ஓட்டி வந்த நபரும் உடனடியாகத் தளத்திலேயே கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர், புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினரும், இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியவருமான நகுலேஸ்வரன் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
மக்கள் பிரதிநிதியாக இயங்கிய ஒருவரே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைப்பற்றப்பட்ட 2 கிலோ கேரளா கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுடன் சந்தேக நபரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, இந்த போதைப்பொருள் வலைப்பின்னலின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
