விளையாட்டு

EPL – 04 சம்பியனாக 2017 வகுப்புக் குழுவினர் முடி சூடிக் கொண்டனர்

கண்டி, தெல்தோட்டை எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் அதன் உப குழுவான EPL நிறைவேற்றுக் குழுவும் இணைந்து நான்காவது முறையாக ஏற்பாடு செய்திருந்த பழைய மாணவர் குழுக்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் திறந்த பிரிவின் சாம்பியனாக 2017 வகுப்புக் குழுவினர் முடி சூடிக் கொண்டனர். இரண்டாம் இடத்தினை 2001 வகுப்புக் குழுவினர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் மூத்த வீரர்களுக்கான போட்டிகளின் இறுதிப் போட்டியில் 1999 வகுப்புக் குழுவினை எதிர்த்தாடிய 1998 வகுப்புக் குழுவினர் வெற்றி வாகை சூடினர்.

பழைய மாணவர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கிடையே நட்புறவையும் விளையாட்டு ஆர்வத்தையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பான தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்று நாட்களாக மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது பங்கு பற்றிய வகுப்புக் குழுவினர் தமது வகுப்பினால் எதிர்காலத்தில் பாடசாலையின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கவிருக்கும் அபிவிருத்தி பணி தொடர்பில் கல்லூரியின் அதிபர் எம்.ஜே.எம். ஜெஸீம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பங்குபற்றிய அணி வீரர்கள் பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து கொண்டமையினை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அங்கத்துவ அட்டைகளும் பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பதாக பழைய மாணவர்கள் பங்கு கொண்ட வாகனப் பேரணியொன்றும் இடம்பெற்றது. பாடசாலையிலிருந்து ஆரம்பித்த குறித்த வாகனப் பேரணி இறுதியில் மைதானத்தினை வந்தடைந்தது. அதன் பின்னரே உத்தியோகவூர்வமாக போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.

Legend 1998 Champion

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *