உள்நாடு

மரண தண்டனை நீக்கம்; சவூதிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜை அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தைப் பெரிதும் பாராட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, இந்தத் தீர்மானம் அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இந்த விவகாரம் தொடர்பில் அக்கறை கொண்டிருந்த இலங்கை மக்களுக்கும் பெரும் ஆறுதலையும் நிம்மதியையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்து முன்னெடுக்கப்பட்ட பொறுமையான இராஜதந்திரத் தலையீடுகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர் ஒருவருக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த அனைத்துத் தரப்பினரின் முயற்சிகளினாலேயே இந்த நல்முடிவைப் பெற முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு விசேட நன்றியைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இந்தச் சட்ட நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இரு நாடுகளினதும் இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுக்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அனோஜனுக்கு எதிரான ஏனைய சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடி வெளிநாடு செல்லும் எந்தவொரு இலங்கையரும் தாம் தனித்து விடப்பட்டுள்ளதாக உணரக்கூடாது என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *