உள்நாடு

குருநாகல், மல்லவப்பிட்டிய 14 வயதுச் சிறுமி மெஹ்னாஸ் றியாஸ் 400 பக்க புலனாய்வு ஆங்கில நாவல் வெளியீட்டு சாதனை

“இந்நாட்டின் கல்விச் சீர்த்திருத்திற்கு அமைவாக மாணவர்களிடையே புத்தாக்க எழுச்சி தற்போது மேலோங்கி வருகின்றது. அந்த வகையில், மெஹ்னாஸ் றியாஸ் எழுதிய ‘wanished without a trace’ ஆங்கில நாவல் நூல் மிக முக்கியத்துவம் பெறுகின்றது” என்று வடமேல் மாகாண ஆளுநர் புகழாரம் சூட்டினார்.

“ஊடகவியலாளர்களும் எழுத்தாளர்களும், இந்நாட்டின் அபிவிருத்திற்கு என்றும் வளம் சேர்ப்பவர்கள்” என்று, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம் குறிப்பிட்டார்.

‘இலங்கை தமிழோசை ஊடக வலையமைப்பு’ ஏற்பாட்டில், 14 வயது மாணவி மெஹ்னாஸ் றியாஸ் எழுதிய “வாணிஸட் வித்தவுத் அ ரேஷ்” என்னும் 400 பக்க புலனாய்வு ஆங்கில நாவல் நூல் வெளியீட்டு விழாவின் போதே, இவர்கள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.

வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூட மண்டபத்தில் வெகு சிறப்புற நடந்தேறிய இந்நிகழ்வில், நமது இளைய சமூகத்தினரின் வாழ்வியல் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இளம் திரைப்பட இயக்குநர் டி.கே. யுவன் இயக்கத்தில் உருவான இலங்கை தமிழ்த் திரைப்படமான “த பைனல் எஸ்கெப்” என்னும் புதிய திரைப்பட வெளியீட்டு விழா, மூத்த இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு என்பனவும் விமர்சையாக இடம்பெற்றன.

‘இலங்கை தமிழோசை ஊடக வலையமைப்பு’ இயக்குநர் அப்துல் மஜீத் ஜெஸீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக வடமேல் மகாண ஆளுநர் திஸ்ஸ குமாரஸ்ரீ வர்ணசூரிய, கௌரவ அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

விசேட சிறப்பு விருந்தினராக, ‘சுயாதீன தொலைக்காட்சி சேவை’ யின் ‘வசந்தம் தொலைக்காட்சி’ மற்றும் ‘வசந்தம் எப்.எம்.’ செய்தி முகாமையாளர் எம்.எஸ். இர்பான் முஹமட் பங்கேற்றிருந்தார்.
இதன்போது, குருநாகல் மாவட்டத்தில் தேசிய ஊடகங்களில் மிக நீண்ட காலமாகப் பணியாற்றி வருகின்ற மூத்த இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் ஆறு பேர் விருதுகள் வழங்கிப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். சரத் யட்டவர, இக்பால் அலி, டி.எம். ஜனூர் கிச்சிலான், எம். சமன்குமார, என்.எம். ரவீந்திர பிரபாத், சாந்தனி திசாநாயக்க ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில், நூல் பற்றிய ஆய்வுரையினை, ‘லைசியம்’ சர்வதேச பாடசாலையின் அதிபர் சந்தன பஸ்நாயக்க நிகழ்த்தினார். நூலின் முதல் பிரதியை, சமூக சேவையாளர் அல் – ஜாமிஉல் அக்பர் ஜும்ஆப் பள்ளிவாசல் உப தலைவர் ஏ.ஆர்.எம். பாரிஸ் பெற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சமயத் தலைவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவ மாணவிகள், வர்த்தகப் பிரமுகர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *