புத்தளம் இந்துக் கல்லூரி மாணவர்கள் புத்தளம் பொது நூலகத்துக்கு விஜயம்.







புத்தளம் இந்துக் கல்லூரி மாணவர்கள் தங்களது கல்விச்சுற்றுலாவின் ஓர் அங்கமாக புத்தளம் பொது நூலகத்திற்கு (18) வெள்ளிக்கிழமை வருகை தந்தனர்.
மாணவர்களின் கல்வி அறிவு மற்றும் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தச் சுற்றுலாவிற்கு பாடசாலையின் ஆசிரியர்களும் வழிகாட்டிகளாக உடனிருந்தனர்.
நூலகத்திற்கு வருகை தந்த மாணவர்களை பிரதம நூலகர் கே.எம்.நிஷாத் மற்றும் நூலகக் குழுவினர் மிகுந்த அன்போடும், உற்சாகத்தோடும் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நூலகத்தின் அமைப்பு மற்றும் செயற்பாடுகள் குறித்து தெளிவான அறிமுகம் வழங்கப்பட்டது.
நூலகர் குழுவினர் மாணவர்களை நூலகத்தின் சகல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று, ஒவ்வொரு பிரிவின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளித்தனர்.
அரிய நூல்கள் மற்றும் ஆய்வுக் கருவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளிப்பட்டது.
கணனி வழித் தகவல்களைப் பெறும் வழி முறைகள் தொடர்பாகவும் மாணவர்களுக்குக் இதன்போது தெளிவு படுத்தப்பட்டன.
குழந்தைகள் மற்றும் இளம் வாசகர் பிரிவில் மாணவர்களுக்குப் பிடித்தமான கதைப் புத்தகங்கள் மற்றும் கல்விசார் சஞ்சிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
நூல்களை இரவல் வழங்கும் பிரிவில், புத்தகங்களை எவ்வாறு பதிவு செய்து பெற்றுக்கொள்வது, வாசிப்புப் பழக்கத்தை எவ்வாறு வளர்த்துக்கொள்வது போன்ற நடைமுறை விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
நூலகத்தின் பல்வேறு பிரிவுகளையும் பார்வையிட்ட மாணவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை நூலகக் குழுவினரிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொண்டனர்.
நூலகத்துக்கான இந்தக் கல்விச்சுற்றுலா தமக்கு மிகுந்த பயனுள்ளதாகவும், புதிய நூல்களை வாசிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்ததாகவும் மாணவர்கள் நூலக குழுவினரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
எம்.யூ.எம்.சனூன்
