புதுப்பொழிவு பெற்ற சீனன் கோட்டை “பத்தை” இரத்தினக்கல் வர்த்தக சந்தை
பாரம்பரியமிக்க பேருவளை-சீனன்கோட்டை “பத்தை” இரத்தினக்கல் சந்தை 18 முதல் புதுப்பொழிவு பெற்று காலை 9.00 மணி முதல் தினமும் ஆரம்பமாகி பி.ப. 3.00 மணியுடன் நிறைவு பெறும். இதுதொடர்பான ஆரம்ப நிகழ்வு மிக விமர்சையாகவும், உற்சாகமாகவும் 18ஆம் திகதி காலை சிலோன் இரத்தினக்கல் மற்றும் ஆபரண (CGJTA) வர்த்தக சங்க தலைவர் அல்ஹாஜ் றிஸ்வான் நயீம் தலைமையில் நடைபெற்றது.
சிலோன் இரத்தினக்கல் மற்றும் ஆபரண (CGJTA) வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆரம்ப நிகழ்வில், களுத்துறை மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினரும்,பேருவளை அபிவிருத்திக் குழுத் தலவருமான சந்திம ஹெட்டியாராச்சி, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர், முன்னாள் நகரபிதாவும், உறுப்பினருமான அல்ஹாஜ் மஸாஹிம் முகம்மத், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை உயர் அதிகாரிகள், GEM SRI LANKA ஜெம் சிறிலங்கா கண்காட்சி தலைவர் அல்ஹாஜ் ஹில்மி காஸிம், சீனன் கோட்டைப் பள்ளிச் சங்க இணைச் செயலாளர்களான அல்ஹாஜ் எம்.எம்.எம். சிஹாப், கலீபத்துஷ் ஷாதுலி அல்ஹாஜ் அஷ்ஷெய்க் இஹ்ஸானுத்தின் (நளீமி), சிலோன் இரத்தினக்கல் வர்த்தக சங்கத் தலைவர் அல்ஹாஜ் ரிஸ்வான் நயீம், அல்ஹாஜ் கிஸான் ஹாஷிம், மூத்த இரத்தினக்கல் வர்த்தகர்களான கலாநிதி அல்ஹாஜ் எம்.நிஸார், அல்ஹாஜ் எம்.ஜே.எம்.ராஸிக், அல்ஹாஜ் எம்.எஸ்.எம். பாயிஸ், அல்ஹாஜ் அத்தாவுல்லாஹ் அபூபக்கர், அல்ஹாஜ் முஸ்லிம் சலாஹுத்தீன், சீனன் கோட்டைப் பள்ளிச் சங்க உறுப்பினர்கள்,சிலோன் இரத்தினக்கல் வர்த்தக சங்க உறுப்பினர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வியாபாரிகள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
முன்னைய காலங்களில் தமது முன்னோர்கள் காலை வேளையிலேயே வியாபரத்தை ஆரம்பித்து நண்பகலில் நிறைவடைந்த சீனன் கோட்டை பத்தை இரத்தினக்கல் சந்தை காலப்போக்கில் சில, பல கால மாற்றாங்களினால் ஆரம்பிக்கும் நேரம் என்பது கட்டம் கட்டமாக மாற்றமடைந்து தற்போது நண்பகலும் பிந்திய ஒரு மணி, 2 மணியையும் தாண்டி ஆரம்பித்து இரவு சுமார் 7 மணி வரை நடைபெற்று வந்தது.
இந்நிலைமையானது வியாபாரத்துக்கு ஆரோக்கியமான நிலையல்ல என்றும், காலை வேளையிலேயே வியாபரங்கள்,தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டால் தான் இறை அருளும், ரஹ்மத்தும். கிடைக்கும் என்ற மார்க்க விழுமியங்களின் அடிப்படையையும் உணர்ந்த சீனன் கோட்டைப் பள்ளிச் சங்கம், சிலோன் இரத்தினக்கல்,ஆபரண வர்த்தக சங்கம் என்பன இணைந்து இரத்தினக்கல் வர்த்தகர்கள் மற்றும் அது தொடர்பான தொழில்களில் ஈடுபடுபவர்களோடு சில கலந்துரையாடல்கள், கூட்டங்களை நடாத்தி இதற்கு சிறந்த தீர்வொன்றைப் பெற முயற்சிகள் மேற்கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடல்களில் ஆரம்பத்தில் பலரும். ஒவ்வொரு நேரத்தை ஆலோசனையாக வழங்கிய நிலையில் இறுதியில் அனைவரும் ஒன்றிணைந்து காலை 9 மணிக்கு சந்தையை ஆரம்பிக்கவும்,பிற்பகல் 3 மணிக்கு நிறைவு செய்யவும் ஆதரவு தெரிவித்த நிலையில் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன் நேற்று அதாவது ஜூலை 18ஆம் திகதி குறித்த நேரத்தில் ஆரம்பிக்கவும்,நிறைவு செய்யவும் தீர்மானம் எடுத்தனர்.
குறித்த காலப்பகுதியில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு வியாபாரிகள், தரகர்கள் மற்றும் சம்பந்தப்பட்டோர்களிடம் நேரடியாகவும், சமூக ஊடகங்கள், பள்ளிவாசல்கள் மூலமும் பிரசாரம் செய்யப்பட்டு 18ஆம் திகதி பத்தை இரத்தினக்கல் சந்தை காலை 9 மணிக்கு வெகு விமர்சையாகவும், எவ்விதப் பாகுபாடும் இன்றி மேற்கூறியது போல் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு அனைத்து வியாபாரிகளும் சமுகம் தந்து ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு 9 மணிக்கு ஆரம்பித்து வைத்தனர்.
சந்தைக்கு வந்திருந்த இரத்தினக்கல் வர்த்தகர்கள் வியாபரத்தை காலையில் ஆரம்பிக்க எடுத்திருக்கும் தீமானமானது வியாபாரத்துக்கு மிக ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அத்துடன் மென்மேலும் இறை அருளும், ரஹ்மத்தும் கிடைக்க வழிவகுக்கும் என்றும் மகிழ்ச்சிகரமாக உரையாடிக் கொண்டிருந்ததையும் காண முடிந்தது.
ஆரம்ப நிகழ்வு புனித கிராஅத் மற்றும் தேசிய கீதத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, இனிய ஜலாலா, ஸலவாத்துடன் இனிதே நிறைவுற்றது.










