இலங்கை முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கு பிரதமர் ஹரிணி பாராட்டு
இலங்கைக்காக ஆற்றிய 90 ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்திற்கு (Ceylon Moor Ladies Union – CMLU) தனது பாராட்டுகளைத் தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இச்சங்கமானது தலைமுறைகள் கடந்து எண்ணற்ற உயிர்களை மாற்றியமைத்த கருணை, பெண் வலுவூட்டல் மற்றும் சமூகத் தலைமைத்துவத்திற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாகுமெனத் தெரிவித்தார்.
நேற்று கொழும்பு Ramada ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் 90ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போது பிரதமர் இக்கருத்துகளை வெளியிட்டார்.
இந்த முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதையிட்டு இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், தங்களது ஆரம்பக்கால நோக்கத்திற்கு உண்மையாகவும், சமூகத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்பவும் தங்களை மாற்றியமைத்துக்கொண்டு, ஒன்பது தசாப்தங்களாகத் தொடர்ச்சியான சேவையை முன்னெடுத்துள்ள தன்னார்வ நிறுவனங்கள் மிகச் சிலவே காணக்கூடியதாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.





