அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை முன்னெடுக்கவும் – பாராளுமன்ற ஆலோசனை கூட்டத்தில் உதுமாலப்பை எம்.பி கோரிக்கை
நாட்டிலுள்ள முன்பள்ளிகளை அரச பாடசாலைக் கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்னெடுக்கும் போது அவற்றை அபிவிருத்தி செய்யவும் முன்பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் அது பெரிதும் உதவியாக அமையும் என்று அம்பாறை மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலப்பை தெரிவித்துள்ளார்.
அதேநேரம் முன்பள்ளி கல்வி தொடர்பில் ஒரேவித கொள்கையையும் பாடவிதானங்களையும் உருவாக்க அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் பாராட்டுக்குரியவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்ஜின் தலைமையில் பாராளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘முன்பள்ளிக் கட்டமைப்புகள் வெளிநாடுகளில் ஆரம்பம் முதலே சிறந்த கட்டமைப்புடன் இயங்குகின்றன. இந்நாட்டின் முன்பள்ளிகள் மாகாண சபைகளின் கீழ் செயற்படுகின்றன. அதனால் முன்பள்ளி கல்வி தொடர்பில் ஒவ்வொரு மாகாண சபையும் வெவ்வேறு விதமான கொள்கையையும், பாடவிதானங்களையும் முன்னெடுக்கின்றன. ஆனால் முன்பள்ளி கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தேசிய மட்டத்திலான கொள்கையும் ஒரே விதமான பாடவிதானத்தையும் செயற்படுத்துவதன் அவசியம் நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது.
கல்வி, உயர் கல்வி அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் நடைபெற்ற போது நானும் இது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியுள்ளேன்.
தற்போது கல்வி, உயர் கல்வி அமைச்சும், சிறுவர், மகளிர் அபிருத்தி அமைச்சும் முன்பள்ளித்துறையில் தேசிய மட்டத்தில் ஒரே விதமான தேசியக் கொள்கையும், ஒரே விதமான பாடவிதானத்தையும் செயற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது.
மேலும் கிழக்கு மாகாணத்தில் 1845 முன்பள்ளிப் பாடசாலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தனியார் கட்டிடங்களிலேயே இயங்குகின்றன. இத்தகைய கட்டிடங்களை அரச நிதி கொண்டு அபிவிருத்தி செய்ய முடியாது.
அதனால் முன்பள்ளிகளை அரசாங்க பாடசாலைக் கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்னெடுக்கும் போது அவற்றை மேற்பார்வை செய்வதும் அபிவிருத்தி செய்வதும் இலகுவாகும். முன்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்பையும் பெறக்கூடிய வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். இது தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இச்சமயம் பிரதியமைச்சர், முன்பள்ளித்துறையில் புதிய திட்டங்களை முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் அமைச்சினால் மேற்கொள்ளப்படுவதால் இம் முன்மொழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனக்கூறினார்.

