கஹட்டோவிட்ட அல் பத்ரியாவில் மாணவர்களின் ஒழுக்க மேம்பாட்டிற்கான விசேட ஒன்று கூடல்
மாணவர்களின் ஒழுக்க மேம்பாட்டில் பாடசாலையும் பள்ளிவாசல்களும் இணைந்து செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தும் விசேட ஒன்று கூடல் ஒன்று கடந்த 07.11.2026 சனிக்கிழமை இரவு 7.45 மணி முதல் 10.30 மணி வரை கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில்மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.எம். அஸ்மிர் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், பிரதேசத்தின் ஜும்ஆ பள்ளிவாசல்களின் நிருவாக சபை உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிராந்தியக் கிளை உறுப்பினர்கள், பாடசாலை நிருவாகத்தினர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
தற்காலச் சூழலில் பிரதேச மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்துவதில் பாடசாலையோடு பள்ளிவாசல்கள் கைகோர்த்து செயற்படுவது காலத்தின் கட்டாயத் தேவையாகும் என்பது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், எதிர்காலத்தில் பள்ளிவாசல்கள் ஊடாக மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் குறித்தும் இதன்போது முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.
மாணவர்களின் எதிர்கால நலனுக்காகவும் சமூக நலனுக்காகவும் பிரதேசத்தின் அனைத்து பள்ளிவாசல் பிரதிநிதிகளும் அனைத்து விதமான வேற்றுமைகளையும் மறந்து ஒரே நோக்கத்துக்காக ஓரிடத்தில் ஒன்றிணைந்தமை சமூக வலைத்தளங்களிலும் கல்விச் சமூகத்தினரிடத்திலும் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, இது மிகவும் பாராட்டத்தக்க ஒரு முன்னெடுப்பாகவும் வர்ணிக்கப்படுகின்றது.
இந்த மகத்தான முயற்சிக்கு பங்களிப்புச் செய்த அனைத்து தரப்பினருக்கும் பாடசாலை நிருவாகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. மேலும், திட்டமிடப்பட்டுள்ள இச்செயற்றிட்டங்கள் அனைத்தும் இறை அருளால் எதிர்காலத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அனைவரது தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் அன்புடன் வேண்டி நிற்பதாக நிருவாகத்தினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
