உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை அண்மித்துள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள அக்வான் புயல் இன்று (17) மேலும் வலுவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிவிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அக்வான் புயலானது தொடர்ந்தும் வடமேற்கு திசையில் நகர்ந்து,  மேற்கு – மத்திய வங்கக்கடல் கடல் பகுதியில் கடுமையான புயலாக வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், இப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 19 ஆம் திகதி மு.ப 05.30 மணியளவில் மிகக் கடுமையான புயலாக மேலும் வலுவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 20 ஆம் திகதி பகல் 11.30 மணியளவில், மிகப் பலத்த புயலாக இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானாம் கடற்கரைப் பகுதியில் நெல்லூர் மற்றும் துனி இடையே இந்தியக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *