உள்நாடு

வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் கற்பிட்டி ஐயூப் பாடசாலையில் திறந்து வைப்பு

கற்பிட்டி ஐயூப் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலைக்கு வேர்ல்ட் விஷன் (world vision) நிறுவனத்தின் கற்பிட்டி பிரதேச அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் முகமாக சுமார் 22 இலட்சம் பெறுமதியில் அமைக்கப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (03) பாடசாலையின் அதிபர் எஸ். சியாவுல் ஹக் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் அதிதிகளாக வடக்கு மற்றும் வடமேல் மாகாண பிராந்திய முகாமையாளர்
ஜூட் நிசாந்த், கற்பிட்டி பிராந்திய நிகழ்ச்சி திட்ட முகாமையாளர்
சுபுன் பீரிஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அசேல ரத்வத்த, கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ஜவாத், கோட்டக் கல்விப் பணிமனையின் ஆசிரியர் ஆலோசகர் எம். ஜே. இஷ்பான், ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் சகூர் , தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலதின் அதிபர் எஸ். எம். அரூஸ், அல் மனார் பள்ளிவாசலின் தலைவர் பஹர்தீன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் முஸவ்பீர் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கற்பிட்டி ஐயூப் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்களின் அன்றாட சுத்தமான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த மீள் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்ட நிலையில் அப்பாடசாலை மாணவர்களுக்கான சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொள்வதில் பல ஆண்டுகள் தீர்க்கப்படாத பிரச்சினை நிலவி வந்தது.
அதற்கமைய, வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் மாணவர்களின் சுத்தமான குடிநீர்த் தேவையை இலகுவாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என அதிபர் எஸ். சியாவுல் ஹக் தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அதிதிகளுக்கான நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *