புத்தளம் அல் அமீன் ஜும்ஆ மஸ்ஜிதில் வாலிபர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், புத்தளம் அல்அமீன் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், அல்அமீன் ஜும்ஆ மஹல்லாவைச் சேர்ந்த வாலிபர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வொன்று சனிக்கிழமை 17.10.2026 இரவு 6.30 மணியளவில் நடைபெற்றது.
மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஜிஃப்னாஸ் மிஸ்பாஹி அவர்கள் கலந்துகொண்டு வாலிபர்களுக்கான சிறப்புரையை நிகழ்த்தினார்.
இதன்போது, வாலிபர்கள் தமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு முக்கிய விடயங்கள் குறித்து அவர் வழிகாட்டினார்.
- அல்லாஹ்வைப் பயந்து வாழ்தல்
வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அல்லாஹ்வின் மீதான பயத்தையும் தக்வாவையும் பேணி, ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது நிறைவேற்றி வாழ வேண்டும் என வலியுறுத்தினார்.
- பெற்றோருக்கு நன்மை செய்தல்
பெற்றோர்களுக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களின் மனம் மகிழும் வகையில் நல்ல பிள்ளைகளாக வாழ்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
- நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்தல்
தமது வாழ்க்கையிலும் ஒழுக்கத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து, தீய நட்புகளிலிருந்து விலகி வாழ வேண்டும் என அறிவுறுத்தினார்.
- சிறந்த வழிகாட்டி ஒருவரைத் தெரிவு செய்தல்
வாழ்க்கையில் சரியான பாதையில் பயணிப்பதற்கும், மார்க்க ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் தம்மை மேம்படுத்திக்கொள்வதற்கும், நல்ல அறிவும் சிறந்த பண்புகளும் கொண்ட தகுதியான வழிகாட்டி ஒருவரைத் தெரிவுசெய்து, அவருடைய ஆலோசனைகளின்படி வாழ்வதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார்.
வாலிபர்கள் தமது இளமைப் பருவத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, மார்க்க ஒழுக்கத்துடனும் சிறந்த பண்புகளுடனும் பொறுப்புணர்வுமிக்கவர்களாக வாழ வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அல்அமீன் ஜும்ஆ மஸ்ஜித் மஹல்லாவைச் சேர்ந்த அனைத்து வாலிபர்களுக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்கி, அவர்களின் வாழ்க்கையில் பரக்கத்தையும் வெற்றியையும் அருள்வானாக!
இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அல்அமீன் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினருக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக!
அல்லாஹ் சுப்ஹானஹு வத்தஆலா, அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை வழங்கி, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனத்தை நஸீபாக்குவானாக. ஆமீன்!


வாலிபர் விவகார அபிவிருத்தி உபகுழு அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம் நகரக் கிளை
