நூலாசிரியர் முஹம்மத் நஸ்ரான் எழுதிய “பலன்புர முஸ்லிம்கள்” நூலின் பிரதிகள் கையளிப்பு
களுத்துறை மாவட்டத்தின் பலாந்தை பிரதேச முஸ்லிம் சமூகத்தின் வரலாறு, கலாசாரம் மற்றும் சமூகப் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “பலன்புர முஸ்லிம்கள்” நூலின் பிரதிகள் மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப், புத்தசாசன சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி கினிதும சுனில் செனவி மற்றும் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் ஆகியோரிடம் நூலாசிரியர் முஹம்மத் நஸ்ரான் கையளித்தார்.
மேல் மாகாண ஆளுனர் அலுவலகத்திலும் புத்தசாசன சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சிலும் வைத்து நூல்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நூலாசிரியர் முஹம்மத் நஸ்ரான் காலத்திற்கு தேவையான ஒரு நூலை வெளியிட்டமைக்கு மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப் பாராட்டினார்.
இலங்கையின் பிரதேச வரலாறு, கலாசாரப் பாரம்பரியம் மற்றும் இன நல்லிணக்கம் தொடர்பான முக்கிய விடயங்களை சமூகமயப்படுத்தும் நோக்கில் இந்நூல் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளதோடு பலாந்தை பிரதேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும்.
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை தேர்தல் தொகுதிக்குட்பட்ட பலாந்தை, தனித்துவமான வரலாற்று மற்றும் கலாசார அடையாளத்தைக் கொண்ட கிராமமாகும். சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் நல்லிணக்கத்தையும் இந்நூல் பிரதிபலிக்கிறது.
“பலன்புர முஸ்லிம்கள்” என்பது மொஹமட் நஸ்ரான் அவர்களின் முதலாவது நூலாகும். பிரதேசத்தின் வரலாறு மற்றும் மக்கள் வாழ்வியல் தொடர்பான முக்கிய தகவல்களை எதிர்கால சந்ததியினருக்கான ஆவணமாகப் பாதுகாப்பதே இந்நூலின் பிரதான நோக்கமாகும்.



(பீ. எம். முக்தார்)
