இலங்கை டெஸ்ட் அணித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார் தனஞ்சய
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா, அணித்தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அணித்தலைமை பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என கருதுவதாக, தெரிவுக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை அணிக்காக வீரராக தொடர்ந்து விளையாட தான் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனஞ்சய டி சில்வா டெஸ்ட் அணிக்கு வழங்கிய தலைமைத்துவத்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனஞ்சய டி சில்வாவின் கிரிக்கெட் வாழ்க்கையின் எஞ்சிய காலத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
