தேசிய, மாகாண பாடசாலைகளுக்கான மாதாந்தமின் கட்டண நிதியொதுக்கீட்டு ஏற்றதாழ்வை நீக்க முடிவு; கல்வி அமைச்சின் பாராளுமன்ற ஆலோனை கூட்டத்தில் தீர்மானம்
பாடசாலைகளுக்கான மாதாந்த மின்சார கட்டண நிதியொதுக்கீட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வை நீக்கி தேசியப் பாடசாலைகளுக்கு போன்று மாகாணப் பாடசாலைகளுக்கும் இந்த ஒதுக்கீட்டை அதிகரிக்கவென மாகாண ஆளுநர்களுக்கு பரிந்துரை செய்வதற்கு பிரதமர் கலாநிதி ஹர்னி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை கல்வி அமைச்சின் ஊடாக மாகாண ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து இக்கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உமாலெப்பை, நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் மாதாந்த மின்சாரக் கட்டணத்திற்காக ஒதுக்கப்படும் நிதியொதுக்கீட்டில் ஏற்றதாழ்வுகள் நிலவுவதாகவும் அதனை நீக்க நடவடிக்கை எடுப்பதன் அவசியத்தையும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்தே பிரதமர் தலைமையில் மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய உதுமாலெப்பை எம்.பி, நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளுக்கு மாதாந்த மின்சார கட்டணமாக ரூ. 25,000 வழங்கப்படுகின்றன. கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மாகாணப் பாடசாலைகளுக்கு 2011.03.01 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள ஈ.பி/20/01/2011 ஆம் இலக்க சுற்றுநிரூபத்தின் அடிப்படையிலேயே இன்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. அதன்படி 1ஏ.பி மாகாணப் பாடசாலைகளுக்கு ரூ. 1,500 வும், 1 சி மாகாணப் பாடசாலைகளுக்கு ரூ. 1,200 வும், டைப் சி – II மாகாணப் பாடசாலைகளுக்கு – 800,டைப் சி – III மாகாணப் பாடசாலைகளுக்கு – 400 என்றபடி நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால் பல மாகாணங்களில் மாகாண பாடசாலைகளுக்கான மாதாந்த மின்சார கட்டண நிதியொதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் கிழக்கு மாகாண சபை, வட மத்திய மாகாண சபை, உள்ளிட்ட சில மாகாண சபைகளில் இதுவரையும் மாகாணப் பாடசாலைகளுக்கான மாதாந்த மின் கட்டண நிதியொதுக்கீடு அதிகரிக்கப்படாமல் உள்ளது. பாடசாலைகள் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியுள்ள பொருட்களைக் கொண்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டிய அவர் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விஷேட பிரேரணையொன்றை நான் கொண்டு வந்து மாகாணப் பாடசாலைகளில் மாதாந்த மின்சார கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர், அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளரிடம் விபரங்களை கேட்டறிந்ததோடு மாகாண ஆளுநர்களுக்கு மாகாணப் பாடசாலையின் மாதாந்த மின்சார கட்டண நிதியொதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை வழங்குவதாகவும் குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
