உள்நாடு

சர்வதேச இரத்தினக்கல் நிகழ்வில் பேருவளை முஸ்ஹிர் முனாஸுக்கு கெளரவம்.

ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் JWA (Jewellery & Gem World-Hong Kong) ஏற்பாடு செய்துள்ள 2026ஆம் ஆண்டின் சர்வதேச ரீதியில் இரத்தினக்கல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள இளம் இரத்தினக்கல் வர்த்தகர்களை கெளரவித்து விருது வழங்கும் நிகழ்வு செப்டம்பர் 16ஆம் திகதி ஹொங்கொன் மாநாட்டு, கண்காட்சி மண்டபத்தில் (HKCEC) நடைபெற்றது.

45 வயதுக்கு உட்பட்ட குறித்த இளம்
இரத்தினக்கல் வர்த்தகர்கள் மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு சர்வதேச ரீதியில் புதிய தொழில் நுட்பம், டிஜிட்டல் அமைப்பு முறை, சிறந்த கல்வித் திறன் போன்ற பல்வேறு அமைப்பில் சர்வதேசத்துக்கு இரத்தினக்கல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் செயல் பாடுகளில் ஈடுபடுகின்ற செயல்பாடுகளுக்காக இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் பல நாடுகளிலும் இருந்தும் குறிப்பாக நிவ்யோர்க், இலங்கை,ஹொங்கொங்,தாய்ப்பே,ஜெய்ப்பூர், பெங்கொக், ஜின்ஜியாங், மினாஸ் போன்ற பல இடங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 45 வயதுக்குட்பட்ட 18 இளம் வர்த்தகர்கள் இவ்விழாவில் கெளரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கெளரவிப்பு விழாவுக்கு இலங்கையிலிருந்து ஒரே ஒரு இரத்தினக்கல் வர்த்தகரே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட வர்த்தகராக பேருவலை- சீனன் கோட்டையைச் சேர்ந்த SRI GEMS உரிமையாளர் முஸ்ஹிர் முனாஸ் அவர்கள் திகழ்கிறார்கள்.

2013ஆம் ஆண்டு சிறியளவில் நிறுவப்பட்ட இவரது SRI GEMS நிறுவனம் இன்று பாரியளவில் வளர்ந்து சர்வதேச ரீதியில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளோடு வியாபாரத் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத் தக்கது.

(பேருவலை எம்.பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *