தினச்சுடர் தேசிய விருது விழாவில் நாடு தழுவிய 46 ஆளுமைகள் கௌரவிப்பு

ஸ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரஸ் ஏற்பாட்டில் தினச்சுடர் தேசிய விருது வழங்கல் இரண்டாம் கட்ட நிகழ்வு வியாழக்கிழமை (17) கொழும்பு பொது வாசிகசாலை மண்டபத்தில் நடை பெற்றது.
தினச்சுடர் பத்திரிகையின் ஆசிரியர் மூத்த ஊடகவியலாளர் ஏ.எம். முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திரைப்பட இயக்குனரும் நடிகருமான திருவாய் மொழி கேசவன், கலைஞர் குணசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஸ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எம் எம் இர்பான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், புகைப்பட கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், திரைப்பட கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள், இலக்கியவாதிகள், மேடை நாடகக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், சமூக சேவையாளர்கள், நூலாசிரியர்கள், அழகு கலை நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் என 46 பன்முக ஆளுமைகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தின் ஆளுமைகளான கற்பிட்டி சிறந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் எச் எம் சியாஜ், புத்தளம் ரத்மல்யாய சிறந்த இளம் பத்திரிகையாளர் ரஸீன் ரஸ்மின், புத்தளம் சிறந்த சமூக செயற்பாட்டாளர் எம்.எப் பாத்திமா சுபியானி, புத்தளம் வேப்பமடு வளரும் கவிமணி குத்சியா இம்தியாஸ் மற்றும் கற்பிட்டி ஏத்தாளை வளரும் ஆக்க எழுத்தாளர்
அகிலா ஜௌபர் ஆகிய ஐவர் கௌரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.







(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
