உள்நாடு

தென் கிழக்கு பல்கலையில் மருத்துவ பீடம்அமைக்கப்பட சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமா லெப்பபை

பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களது தூரநோக்கு சிந்தனையால் உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் சகல சமூகங்களும் நன்மையடைந்து வரும் இக்காலகட்டத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழத்திற்கான மருத்துவ பீடத்தினை நிறுவதற்காக எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று திகாமுல்ல மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.1

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஒன்றை நிறுவுவது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் பாராளுமன்றதில் கொண்டு வரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடார்.

இவ்விவாதத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் குறுகிய காலகட்டத்திற்குள் சகல இன மக்களும் நன்மை பெறக்கூடிய வகையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை செயற்பாடுத்தினார். இந்த அவிவிருத்தித் திட்டங்களில் மிக முக்கியமான திட்டமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். அஷ்ரஃப் அவர்கள் எங்களை விட்டுப் பிரிந்து 26 வருடங்கள் நிறைவு பெறும் இக்காலகட்டத்தில் தலைவர் அவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த சூழலில் அவரால் உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஒன்றை நிறுவுவது
தொடர்பான தனிநபர் பிரேரணையை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம.பி கொண்டு வந்ததையிட்டு அவருக்கு முதலில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2022 ஆம் ஆண்டிலிருந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயர் பேரவை மற்றும் சபையினரின் செனட் சபையின் ஒப்புதலுடன் 2023 இல் இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இக்கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடத்திற்கு தேவைப்படும் விரிவான வரவு-செலவுத் திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டு சமீபத்தில் மருத்துவ பீடங்களை நிறுவியுள்ள பல்கலைக்கழகங்களுடன் கலந்துரையாடி ஒரு விரிவான வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டதுடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் பங்களிப்பு மூலம் நிதித் தேவைகளினை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பது குறித்து ஒரு திட்ட வரைபும் தயாரிக்கப்பட்டிருந்தது.

2024 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடம் நிறுவுவது தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சென்ற வருட வரவு-செலவுத் திட்ட கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் விவாதத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமரிடம் முன்வைத்தேன்.

இதன்பின்னர் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் என்னால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடம் நிறுவுதல் தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. (இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்.

தற்போதுள்ள மருத்துவ பீடங்கள் பேராசிரியர் அலகுகளை பராமரிப்பதிலும், மருத்துவப் பயிற்சிகளை நிர்வகிப்பதிலும் கடுமையான சவால்களை எதிர்கொள்வதால், ஒரு புதிய மருத்துவ பீடத்தை நிறுவுவது சாத்தியமற்றது என அக்குழு ஏகமனதாக தெரிவித்து, இம்முன்மொழிவினை நிராகரித்துள்ளது.

ஏனைய மாகாணங்களில் உள்ள மருத்துவ பள்ளிகளில் நிலவும் நெரிசல்களையும் அவை எதிர்கொள்ளும் முறையான அழுத்தங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எனினும், எமது பிராந்தியத்தின் தனித்துவமான, சுயசார்பான மருத்துவ உட்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் திட்டத்தை சாத்தியமற்றது எனக் கூறிய நிராகரிப்பது முற்றிலும் பொருத்தமற்றதாகும். இப் புதிய பீடமானது தேசிய மட்டத்தில் நிலவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் முற்றிலும் உள்ளூர் கட்டமைப்புகளைக் கொண்டு சுயாதீனமாக இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள மருத்துவப் பீடங்கள் பேராசிரிய அலகுகளைப் பராமரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகயின் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், தென்கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடக் கருத்தாக்கம் அருகிலுள்ள பிரம்மாண்டமான மருத்துவ உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த மூலதனத் தடையை முற்றிலும் நீக்குகிறது.

01 பில்லியன் ரூபாய் பெறுமதியான முன்-மருத்துவ உட்கட்டமைப்பு இப்புதிய பீடத்திற்காக புதிதாக கட்டிடங்களை அமைக்கத் தேவையில்லை. நிந்தவூரில் ஏற்கனவே 01 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பொது முதலீட்டில் கட்டப்பட்டு தற்போது பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ள 07 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பல மாடி மருத்துவமனை வளாகம் இதற்காக பயன்படுத்தப்படும். இது அரசாங்கத்திற்கு ஏற்படும் பாரிய மூலதனச் செலவை முழுமையாக தவிர்க்கிறது.

பல்கலைக்கழகத்திற்கு மிக அருகாமையில் உள்ள கல்முனை-வடக்கு ஆதார வைத்தியசாலை, கல்முனை-தெற்கு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசால, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று தள வைத்தியசாலைகள் மற்றும் திருக்கோவில் தள வைத்தியசாலை ஆகிய பிரதான மருத்துவமனைகளை மருத்துவப் பயிற்சிக்காகப் பயன்படுத்த முடியும்

நமது நாட்டில் அமைந்துள்ள பல பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்கள் வெளிநாட்டு நிதி ஊடாக உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் இலங்கையில் சவூதி அரேபியாவின் நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ள புதிய மருத்துவ பீடம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடமாகும். இது 2026 ஜூலை 04 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை வெளிநாட்டு நிதியினூடாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *