உள்நாடு

வரலாற்றுச் சாதனை படைத்து இன்று வெற்றியுடன் நாடு திரும்பினார் ருமேஷ் தரங்க!

ஒலிம்பிக் செம்பியன் மற்றும் உலக செம்பியன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை விஞ்சி, தற்போதைய உலக தடகள அரங்கின் ஈட்டி எறிதல் போட்டியில், தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிரூபித்து வரும் இலங்கையின் ஈட்டி எறிதல் செம்பியன் ருமேஷ் தரங்க, இன்று (15) அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.

தனது வெற்றியையிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த ருமேஷ், இதற்காக அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், எதிர்காலத்தில் இலங்கைக்காகத் தான் வெல்வதற்கு இன்னும் மூன்று பதக்கங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்தார்.

“உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது… இலங்கைக்கு இப்படி இரண்டு கிண்ணங்களைக் கொண்டுவர முடிந்ததைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இதுவரை நான் செய்த அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகம் உருவாக்கியுள்ளேன். இந்த மாதம் 17 ஆம் திகதி நூல் வெளியீட்டு விழா (Book launch) கொழும்பில் நடைபெறவுள்ளது. அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்தால், நான் கடந்து வந்த பாதை தெரியும். எனது அடுத்த இலக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (Asian Games), உலக செம்பியன்ஷிப் (World Championship) மற்றும் ஒலிம்பிக். இலங்கைக்காக நான் வென்று கொடுக்க வேண்டியது இன்னும் மூன்று பதக்கங்கள் மட்டுமே” என்றார்.

இப்போட்டியின் முதல் சுற்று முடிவில் ருமேஷ் ஐந்தாவது இடத்தில் இருந்தார்.
இரண்டாவது சுற்றில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.
மூன்றாவது சுற்றில் 87.11 மீற்றர் தூரம் எறிந்து போட்டியில் முதலிடத்தைப் பிடித்தார்.

போட்டியின் நான்காவது மற்றும் இறுதி முயற்சியில் 91.09 மீற்றர் என்ற பிரம்மாண்ட எறிதலைப் பதிவு செய்து, “தற்போதைய உலக தடகள களத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் தன்னை மிஞ்ச எவரும் இல்லை” என்பதை ருமேஷ் தரங்க, மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார்.

இதன்படி, ஆண்கள் ஈட்டி எறிதலில் பொதுநலவாய செம்பியன் மற்றும் டைமண்ட் லீக் செம்பியனான ருமேஷ் தரங்க, ‘வேர்ல்ட் அல்டிமேட் செம்பியன்’ (World Ultimate Champion) பட்டத்தையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இந்த வெற்றிக்காக ருமேஷுக்கு 1,50,000 அமெரிக்க டொலர்கள் ரொக்கப் பரிசாகக் கிடைத்ததுடன், அது இலங்கை ரூபாவில் சுமார் 5 கோடிக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *