தேசிய மக்கள் சக்தியின் “வளமான நாடு அழகான வாழ்க்கை” தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் 2 வருடங்கள் சென்றும் நிறைவேற்றப்படவில்லை
பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி தெரிவிப்பு

2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்கல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
கௌரவ சபைக்குத் தலைமை தாங்கும் தலைவர் அவர்களே, 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த சூழ்நிலையில், முப்படை நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்காகவே இந்த அதிகாரம் உருவாக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்புத் தேவைகளையும் நிர்வாக முன்னுரிமைகளும் வெகுவாக மாறியுள்ள இந்நிலையில் இவ் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தேசிய மக்கள் சக்தியின் “வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உள்ளிட்ட அடக்கு முறை சார்ந்த அனைத்து சட்டங்களையும் இல்லாதொழித்து அனைத்து மக்களினதும் சுதந்திரத்தினை உறுதி செய்தல் என வாக்குறுதியளித்தும் இரண்டு வருடங்கள் சென்ற பின்னும் இதுவரையும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்காமல் செயல்பட்டு வருகின்றனர்.
2015-2019 புதிய அரசியலமைப்பு ஒன்றினை தயாரிப்பதற்காக கடைபிடித்த ஏற்பாட்டினை துரிதமாக நிறைவு செய்து சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரே நாட்டிற்குள் அனைத்து மக்களும் ஆட்சியில் தொடர்பு கொள்ளக்கூடியவாறு ஒவ்வொரு மாகாணத்திற்கும் அரசியல் ரீதியினதும், நிர்வாக ரீதியினதுமான அதிகாரத்தை பகிர்ந்தளித்தல்
தற்போது காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் ஒரு வருட காலத்திற்குள் நடாத்தி மக்கள் நிர்வாகத்திற்கு பழகிக் கொள்வதற்காக வாய்ப்பினை வழங்குதல்.
காணி ஆணையாளர் திணைக்களத்தின் தரவுகளுக்ககிணங்க இலங்கையின் ஒட்டுமொத்த நிலப்பரப்பான 6.6 மில்லியன் ஹெக்டயரில் 82% அதாவது 5.4 மில்லியன் அரசாங்கத்திற்கு சொந்தமானதாக அமைவதோடு எங்கே 18% அதாவது 1.2 மில்லியன் ஹெக்டேயர் பிரத்தியேக காணிகளாக நிலவுகின்றன. அரசாங்கத்தின் காணிகளாக நிலவுகின்ற 5.4 மில்லியன் ஹெக்டெயரில் 32% அதாவது 1.7 மில்லியன் ஹெக்டேயர் காடுகளாக காணப்படுகின்றன. நிர்வாகத்தினதும், முகாமைத்துவத்தினதும் வசதி கருதி கானிகளை பயன்படுத்துகின்ற விதத்திற்கிணங்க அவை விவசாய, வணிக மற்றும் வதிவிட காணிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
காணி வளங்களை நிர்வகிப்பதற்காக குடியேற்ற ஆட்சிக்காலத்தில் விதித்த பல்வேறு சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள் மூலமாக இலங்கையின் காணி முகாமைத்துவ முறைமையில் தனித்துவமான தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னர் நிலவிய அரசாங்கங்களால் நாட்டினதும் மக்களினதும் மேம்பாட்டுக்காக இந்த சட்டங்களை அறிவியல் ரீதியான திருத்தத்திற்கு இலக்காக்குவதற்காக விஷேட முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு குறுகிய நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சில காணி மறுசீரமைப்புக்களும், காணி பங்கீட்டுக் கொள்கைகளும் சமூக ரீதியான மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை வழிசமைத்துள்ளன. காணிகளின் உரிமை பற்றி நிலவுகின்ற சிக்கல்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாதுள்ளதோடு அது பல்வேறு சமூக சிக்கல்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
வினைத்திறன் நிர்வாகத்திற்கும், முகாமைத்துவத்திற்கும் வழிசமைக்கின்ற காணி பற்றிய புதிய சட்டக் கட்டமைப்பும், புதிய காணிச் சட்டம் ஒன்று உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டும் 02 வருடங்கள் சென்ற நிலையில் இன்று இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.
நிறைவேற்று ஜனாதிபதி அரசியலமைப்பினை ஒழித்துக் கட்டி பாராளுமன்ற ஆளுமையை நிலைநாட்டுவது மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதி ஒருவரை நியமித்தல்
(தேசிய மக்கள் சக்தியின் “வளமான நாடு அழகான வாழ்க்கை” என்ற தேர்தல் வாக்குறுதியின் பிரதியினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்)
அண்மையில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நமது நாட்டை பற்றி அறிக்கையொன்று வெளியிட்டுள்ளார். அதில் மாற்றத்திற்கான வேகம் இலங்கையில் இல்லை என தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை விடுவித்தல், பயங்கரவாத சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக கைதிகளாக உள்ளவர்களை விடுவித்தல்
ஒவ்வொரு உள்ளூராட்சி, மாவட்டம் மற்றும் மாகாணங்களுக்கும் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றுதல்
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவதுடன் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தல்
மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் உள்ள நபர்களை அரசாங்கம், பாதுகாப்புத்துறை அல்லது இராஜதந்திர சேவைகளில் உயர் பதவிகளுக்கு நியமிப்பதை தவிர்த்துக் கொள்ளல்
நமது நாட்டை பற்றி ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் அதிருப்தி அறிக்கை எமது நாட்டின் நல்ல பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. எனவே, அரசாங்கம் தங்களின் செயற்பாடுகளில் மாற்றத்தினை செய்தாக வேண்டும்
தொழில் வாய்ப்புகள் அரசியல் அழுத்தங்களின்றி சகல இனத்தவர்களுக்கும் நியாயமான வகையில் கிடைக்கக் கூடியதாக தகைமைகளின் அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதனை உறுதிப்படுத்தல்
அண்மையில் நடைபெற்ற 76 உதவி இளைஞர் சேவை அதிகாரி நியமனத்திற்காக நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் அம்பாறை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
76 உதவி இளைஞர் சேவை அதிகாரிகள் வெற்றிடங்களுக்காக 4600 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைத்து 2வது நேர்முகப் பரீட்சைக்கு 152 பேர் கொண்ட பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது. (இந்த பெயர்ப்பட்டியலின் பிரதியினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்) இந்த பெயர்ப்பட்டியலில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும், சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 07 வெற்றிடங்கள் காணப்பட்ட போதும் 152 பேர் கொண்ட பெயர்ப்பட்டியலில் 02 நபர்களின் பெயர்கள் மாத்திரம் இடம்பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 வெற்றிடங்களுக்கு 08 தமிழ் சமூகத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தன்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் இருந்து ஒரு முஸ்லிம் கூட தெரிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்து ஓட்டமாவடி பிரதேச பிரஜா சக்தித் தலைவர் M.I.M. முபாஸ் தனது தவிசாளர் பதவியினை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தில் நான் பிரஜா சக்தி தலைவர் பதவியை விட்டு விலகிறேன் ஆனால் எமது மக்களுக்காக பேசுவதற்கு ஒரு போதும் விலகப்போவதில்லை எனது பதவி முடிவடையலாம், எனது அரசியல் பொறுப்பு மாறலாம் ஆனால் எனது சமூகத்தின் நியாயமான உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் எனது பொறுப்பு முடிவடையாது. எனது தனிப்பட்டவைக்காக அல்ல, எனது சமூகத்தின் நலனுக்காகவும், எமது மக்களின் எதிர்காலத்திற்காகவும் இம்முடிவினை எடுத்துள்ளேன் என M.I.M. முபாஸ் தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
(முபாஸ் அவர்களின் இராஜினாமா கடிதத்தின் பிரதியினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்.)
நமது நாட்டின் அரசியல் வரலாற்றினை பின்னோக்கிப் பார்க்கின்ற போது ஆட்சி அதிகாரங்கள் இறைவனின் நாட்டப்படியே கிடைத்திருக்கிறது என்ற வரலாறுகளை நாம் மறந்து விடக்கூடாது. எனவே, மற்றவர்களை புண்படுத்தும், பழிவாங்கும் செயற்பாடுகளை விடுத்து தங்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும்.
நமக்கு கிடைத்துள்ள ஆட்சி அதிகாரங்கள் எப்போதும் நிலைத்திருக்கும் என்ற மனப்பாங்கில் ஆளும் கட்சியினரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு 2 வருடங்கள் பதவிக்காலம் இருக்கத்தக்கதாக 2015ல் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி தோல்வி அடைந்தார்.
அப்பம் சாப்பிட்டுவிட்டுச் சென்ற மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகி அதன் பின் 69 இலட்சம் வாக்குகள் பெற்று கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார். கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி பதவியில் இருந்து வானத்திலும் நீரிலும் சில நாட்கள் வாழ்ந்து விட்டு நமது நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியானார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மஹியங்கனையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமதாச, அநுர குமார திசாநாயக்கவிடம் தோல்வி அடைந்துள்ளார் என பகிரங்கமாக அறிவித்துவிட்டு மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், பொத்துவில், அக்கரைப்பற்று பிரதேசங்களில் ஒரு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் போன்று பாதைகளில் இறங்கி நடந்து திரிந்த வரலாற்றை வரலாற்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அநுர குமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கான வாயப்பினை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் வழங்கினார் என்ற வரலாற்றை ஆளும்கட்சியினர் மறந்துவடக் கூடாது.
