உள்நாடு

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் கஹகோனா மலர்களால் அழகாக மாறிய மலைநாடு

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் நிலவிய சீரற்ற வானிலை தற்போது நீங்கியுள்ள நிலையில், அப்பகுதிகளில் ‘கஹகோனா’ மலர்கள் பூத்துக் குலுங்கி, மலை நாட்டையே அழகிய ஓவியமாக மாற்றியுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் தேயிலைத் தோட்டங்கள், ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளின் இரு புறங்களிலும், ஹட்டன் – பொகவந்தலாவ பகுதிகளிலும் உள்ள “கஹகோனா” மரங்களில் தற்போது அதிகளவில் மலர்கள் பூத்துள்ளதைக் காண முடிகிறது.

இலங்கையில் தேயிலைப் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில், தேயிலைச் செடிகளுக்கு நிழல் வழங்குவதற்கும், மண் அரிப்பைத் தடுப்பதற்குமாக “கஹகோனா” மற்றும் ‘‘மேய்மாரா” போன்ற மரங்கள் தோட்டங்களில் நடப்பட்டதாக தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் “கஹகோனா” மரங்களில், இந்த ஆண்டு அதிகளவில் மலர்கள் பூத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலர்களிலிருந்து வீசும் நறுமணத்தால் ஈர்க்கப்படும் ஏராளமான வண்டுகள் மற்றும் தேனீக்கள், மகரந்தச் சேர்க்கைக்காக இந்த மலர்களை நாடி வருவதாகவும் தோட்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில், வீதிகளின் இரு புறங்களிலும் பூத்துக் குலுங்கும் “கஹகோனா” மலர்கள், தற்போது மலை நாட்டின் இயற்கை அழகை மேலும் அதிகரித்துள்ளன.

வண்ணமயமாகக் காட்சியளிக்கும் இந்த மலர்கள், அந்தப் பகுதிக்கு வரும் மக்களுக்கு கண் கொள்ளாக் காட்சியாக மட்டுமன்றி, மனதுக்கு அமைதியைத் தரும் அழகிய இயற்கைக் காட்சியாகவும் மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *