உள்நாடு

சாலியவெவ பஸ் விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்வு

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ 19ஆவது மைல்கல் பகுதியில் நேற்று (22) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் நோக்கிப் பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியோரத்தில் இருந்த பாலத்தில் மோதி, வீதியை விட்டு விலகிச் சென்று சுமார் 200 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, அதி உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதி கவிழ்ந்துள்ளது.

விபத்து நடந்த சமயத்தில் பேருந்தில் சுமார் 50 பயணிகள் பயணித்துள்ளனர். விபத்தையடுத்து சாலியவெவ பொலிஸாரும் அப்பகுதி மக்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், படுகாயமடைந்த பேருந்தின் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்து மோதியதில் அதி உயர் அழுத்த மின் கம்பம் பலத்த சேதமடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டது. சம்பவம் தொடர்பில் சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *