தனியார் மேலதிக வகுப்புகளை நடாத்துவோர் கற்பித்தலுக்கான சிறப்பு உரிமம்(லைசென்ஸ்) பெறுவது கட்டாயம்
தனியார் மேலதிக வகுப்புகளை (Tuition classes) நடத்தும் ஆசிரியர்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இனி கற்பித்தலுக்கான சிறப்பு உரிமத்தைப் (Teaching License) பெறுவது கட்டாயமாக்கப்பட உள்ளதாகக் கல்வி அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள “தேசிய கல்விச் சபை” (National Education Council) நிறுவப்பட்டதன் பின்னர் இந்த உரிமம் வழங்கும் முறைமை நடைமுறைக்கு வரும் என்றும், இந்த உரிமத்தைப் பெறுபவர்கள் மட்டுமே தகுதியான ஆசிரியர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், திறமையான ஆசிரியர்களைப் பாடசாலை அமைப்பில் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், முனைவர் பட்டம் (PhD) பெறும் ஆசிரியர் ஒருவரின் அடிப்படைச் சம்பளத்தை, பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் அடிப்படைச் சம்பளத்திற்கு நிகராக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொடுப்பனவுகளில் மட்டுமே இருவருக்குமிடையே வேறுபாடு இருக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்க்கும்போது அறவிடப்படும் கட்டணங்களுக்குத் தர நிர்ணயம் கொண்டுவரப்படவுள்ளதுடன், அவர்களைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறைச் செயல்பாடுகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. தேசிய கல்விச் சபை அமைக்கப்பட்டதன் பின்னர் இனிவரும் காலங்களில் பட்டதாரிகள் மட்டுமே ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், கல்வி சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
