அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Award of Excellence -2026 கௌரவிக்கும் நாடளாவிய நிகழ்வு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரி பிரிவின் ஏற்பாட்டில், க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுத் தொடர் இம்முறையும் நாடளாவிய ரீதியில் AWARD OF EXCELLENCE (ASSAD INSPIRE AWARD) என்ற திட்டத்தின் கீழ் இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் கீழ், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்கள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் Z-Score அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிப்பதுடன், அவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டும் வகையில், அவர்களது பெற்றோர்களின் பங்கேற்புடன் இக்கௌரவிப்பு நிகழ்வுகள் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களின் சிந்தனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் பல்வேறு தொடர் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வியின் ஊடாக மாணவர்களை ஊக்குவித்து, எதிர்கால சந்ததியினரை அறிவு மற்றும் ஆற்றல்மிக்க சமூகமாக உருவாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், இன, மத மற்றும் சமூக வேறுபாடுகளுக்கு அப்பால், கல்விச் சாதனைகளை மதிக்கும் பொதுவான நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது ஆரம்ப காலம் தொடக்கம் கல்வித் துறைக்கு தொடர்ச்சியாக முன்னுரிமை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மாணவர்களின் கல்வி முன்னேற்றம், திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கல்விசார் செயற்பாடுகள் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நாடளாவிய கௌரவிப்பு நிகழ்வுத் தொடரின் முதல் கட்டமாக,
- 11ஆம் திகதி, மாலை – திருகோணமலை மாவட்டம்
- 12ஆம் திகதி, மாலை – மட்டக்களப்பு மாவட்டம்
- 13ஆம் திகதி, காலை,– அம்பாறை மாவட்டம்
ஆகிய மாவட்டங்களில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரி பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வுகள் மூலம் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை பாராட்டி, அவர்களது சாதனைகளை சமூக மட்டத்தில் வெளிப்படுத்துவதுடன், ஏனைய மாணவர்களுக்கும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஊக்கத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.


ஊடகப்பிரிவு,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
