உள்நாடு

சாதனைகளால் சிறகடிக்கும் மாற்றுத்திறனாளிகள்

மேல்மாகாணம் கம்பஹா மாவட்டம் திஹாரிய தூல்மலையில் அமைந்துள்ள இஸ்லாமிய அங்கவீனர் நிலையம் 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

செவிப்புலன் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கற்றல் இடர்பாடு, உடல் மற்றும் மன ஊனம் உள்ளவர்களுக்கு கல்வி தொழில் பயிற்சி, உணவு, தங்குமிடம், மருத்துவம் அனைத்தையும் வழங்கி வரும் நிலையமாக இது செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

சைகை மொழி, Braille முறை மற்றும் விசேட கற்பித்தல் முறை மூலம் மாணவர்களுக்கு இங்கு கற்பித்தல் நடைபெற்று வருகின்றது.
மனித நேயத்தின் அடையாளமாக விளங்கும் இந்த நிலையம் தற்போது 42 வருட கால சேவை வரலாற்றைக் கொண்டது.

இதன் ஸ்தாபகத் தலைவரான அல்ஹாஜ் ஜிப்ரி ஹனீபாவின் மறைவுக்குப் பின் திரு. M.R.M. ரிஸ்வான் தலைமையிலான முகாமையாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழு இப் பாடசாலையை நிர்வகித்து வருகிறது.

பாடசாலையின் அதிபராக திருமதி M.S.H. ரிபாயாவும், உப அதிபராக திருமதி M.L.S. ஸஹானாவும் கடமையாற்றி வருகின்றனர். இங்கு பல்வேறு திறமையுடைய ஆசிரியர்கள் தியாகங்களுக்கு மத்தியில் கல்வி கற்பித்து மாணவர்கனை சாதனைகளால் சிறகடிக்க வைப்பதென்பது வெள்ளிடை மலை.

எமது மாணவர்களோ சாதாரண மாணவர்களுடன் போட்டியிட்டு பல வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.
2026.07.26 அன்று நடைபெற்ற தேசிய மீலாத்தின கம்பஹா மாவட்ட கவிதை எழுதுதல் போட்டியில் உடல் ஊனமுடைய எமது மாணவன் A.S.ஸனாஉல்லா சாதாரண மாணவர்களுடன் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதற்காக 2026.08.26 அன்று நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியில் நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி அரச பெரு விழாவில் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். மான்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்ட இவ்விழாவில் எமது செவிப்புலன் குறைபாடுடைய மாணவர்கள் களிகம்பு நடனம் மூலம் அவரை வரவேற்றதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் 2026.08.26 அன்று திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்ற ” ரேடியோ மீலாத்” விழாவில் எமது பார்வைக் குறைபாடுடைய மாணவர்களான M.F.M. உமர், M.I.M. இயாஸ் ஆகியோர் “இசையும் கதையும்” என்ற நிகழ்வில் கலந்துகொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றுக்கொண்டனர். மேலும் M.I.M. இயாஸ் என்ற மாணவன் Braille குற்றெழுத்து முறையில் சில புத்தகங்களை எழுதி வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மாற்றுத் திறனாளிகளால் சாதனை படைத்து வரும் எமது பாடசாலை மென்மெலும் உயரட்டும். எட்டுத் திக்கெங்கும் புகழ் பரப்பட்டும். அந்த வல்லோன் அதற்கு அருள் வழங்கட்டும்.

ஆக்கம்
H.N.F.பஸீனா
ஆசிரியை.
உடுகொடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *