உள்நாடு

மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்பு மற்றும் தட்டச்சுக் கட்டணங்கள் திருத்தம்; புதிய சுற்றறிக்கை வெளியீடு

அரசாங்கத் துறையில் மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்பு மற்றும் தட்டச்சுப் பணிகளுக்கான கட்டணங்களை திருத்தியமைத்து பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இலக்கம் 12/2003(V) இன் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலின் படி, திருத்தப்பட்ட புதிய கட்டணக் கட்டமைப்பு கடந்த 2026 ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அமைச்சு தெரிவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆவணத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, மொழிபெயர்க்கப்படும் ஒரு சொல்லுக்கு ரூபா 5.00 வீதம் செலுத்தப்படும். மூல ஆவணம் அல்லது மொழிபெயர்க்கப்பட்ட ஆவணத்திலுள்ள சொற்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இக்கட்டணம் செலுத்தப்படும்.

மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத நிறுவனங்கள், தகுதியான நபர்களைத் தெரிவுசெய்து ஒப்பந்த அடிப்படையில் சேவைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் உரைபெயர்ப்புகளுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு ரூபா 1,400/- வும், விஞ்ஞான / தொழில்நுட்ப விரிவுரைகளை உள்ளடக்கிய விசேட உரைபெயர்ப்புகளுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு ரூபா 1,500/- வும், பொதுக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் ஏனைய பொதுவான உரைபெயர்ப்புகளுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு ரூபா 1,000/- வும் செலுத்தப்படும்.

360 சொற்கள் அல்லது அதற்கு மேல் (ஒரு பக்கம்) தட்டச்சு செய்வதற்கு ரூபா 90/-
கட்டணமாக செலுத்தப்படும்.

240 முதல் 359 சொற்கள் வரை
தட்டச்சு செய்வதற்கு ரூபா 80/- உம், 240 சொற்களுக்குக் குறைவாக தட்டச்சு
செய்வதற்கு ரூபா 60/- உம்
கட்டணமாக செலுத்தப்படும்

ஸ்டென்ஸில் ஒரு பக்கம் தட்டச்சு செய்ய ரூபா 100/- கட்டணமாக செலுத்தப்படும்.

கணினியில் அச்சிடுவதற்கும் இக்கட்டணங்களே பொருந்தும் என்பதுடன், வேலைகள் நிறைவுசெய்யப்படும் அடிப்படையில் மட்டுமே கட்டணங்கள் செலுத்தப்படும்.

கடந்த 2026 ஜூன் 30 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இக் கட்டணங்கள் அதிகரிகக்கப்பட்டுள்ளதாக பொது நிருவாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(எம்.ஐ. அப்துல் நஸார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *