ஐந்து மாகாணங்களில் கடும் மழை பெய்யலாம்
மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (27) வெளியிடப்பட்டுள்ள இந்த வானிலை முன்னறிவிப்பின்படி, குறித்த மாகாணங்களின் சில பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
பலத்த மழை பெய்யும் பகுதிகளில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகிறது.
மலைப்பாங்கான பகுதிகளில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் ஏற்படக்கூடும்.
ஆறுகள், நீரோடைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்போர் நீர்மட்ட உயர்வு குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.
இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் திறந்தவெளிகளில் நிற்பதையும் மரங்களின் கீழ் தஞ்சமடைவதையும் தவிர்க்க வேண்டும்.
மழை நிலவரம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும், அனர்த்த அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிப்போர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
