உள்நாடு

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பைத் திருத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் ஆகிய இரண்டு முக்கிய சட்டமூலங்கள் இன்று (18) பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்பிற்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பாராளுமன்ற அமர்வின் முக்கிய நடவடிக்கைகள் தொடங்கும் போது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இச்சட்டமூலங்களைச் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால் நீதித்துறை அமைப்பில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும்.உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்படும்.

மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்துவதற்கு வழிவகை செய்யப்படும்.

ஒரு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த பின்னரே பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இன்றைய சமர்ப்பிப்பைத் தொடர்ந்து, இச்சட்டமூலங்களை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்படும். அதன்பின்னர், தாக்கல் செய்யப்படும் மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்து, 3 முதல் 21 நாட்களுக்குள் தனது இறுதித் தீர்மானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு முறைப்படி அறிவிக்கும்.

அதேவேளை, இச்சட்டமூலங்கள் இன்று சமர்ப்பிக்கப்படும் போது அதற்குப் பாராளுமன்றத்தில் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. நேற்று (17) மாலை நடைபெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விசேட கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சட்டமூலங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும், அம்மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்தின் அனைத்து 13 நீதியரசர்களையும் கொண்ட முழுமையான நீதியரசர்கள் குழாமை  நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *