கட்டுரை

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ; ஆசிரியர் தின சிறப்புக் கவிதை

ஆசிரியர் தினத்தையொட்டிய சிறப்புக் கவிதை

மகனே..! மகளே..!

என் பள்ளிப் பருவத்தில்
ஆசிரியர் தினம் இருந்ததாக நினைவில்லை,
சிறுவர் தினம் கொண்டாடியதாக நினைவில்லை.

ஏனென்றால்,
எல்லா நாளும் ஆசிரியர் தினமாய் இருந்தது.
எல்லா நாளும் சிறுவர் தினமாய் இருந்தது.

ஆசிரியரைக் கண்டால்
எழுந்து நிற்க ஒரு தினம் தேவைப்படவில்லை,
அவர் நிழல் தெரிந்தாலே
எங்கள் தலை தானாய் வணங்கியது.

அவர் அரவணைப்பு கூட
அன்று ஒரு தினமாய் தெரிந்தது,
அவர் பார்வை கூட
தினத்தின் அழகாய் தெரிந்தது.

அவர் அடித்தால் கூட
அது வலியாய் தெரியவில்லை,
வழியாய் தெரிந்தது.
அது தண்டனையாய்
இருக்க வில்லை.
திருத்துதலாய் இருந்தது.

மகனே..! மகளே..!
உன் பள்ளிப் பருவத்தில்..

ஆசிரியரை நினைக்க ஒரு தினம்,
பிள்ளையை நினைக்க ஒரு தினம்,
தாயை நினைக்க ஒரு தினம்,
தந்தையை நினைக்க ஒரு தினம்…

மனிதர்களை மதிக்க
இப்போது தினங்கள் தேவைப்படுகின்றன.

மகனே..! மகளே..!
தவறு உன் மீதும் இல்லை,
என் மீதும் இல்லை.

அன்று மனிதர்கள்
நல் வாழ்க்கைக்குள் வாழ்ந்தார்கள்,
இன்று மனிதர்கள்
நல்வாழ்வைத் தேடி
ஓடுகிறார்கள்.

அன்று மரியாதை என்பது
பாடமாக இருக்கவில்லை,
அது பழக்கமாக இருந்தது.
பண்பாடாக இருந்தது.

அன்று அன்பு என்பது
வாசகமாக இருக்கவில்லை,
அது சுவாசமாக இருந்தது.

அன்று சிரிப்பு
பரிசாகக் கிடைத்தது,
ஊக்கம் விருதாகக் கிடைத்தது.
ஒரு சொல் போதும்,
ஒரு வாரம் வாழ்ந்தோம்.

அதனால் தான் மகனே,
எங்களுக்கு தினங்கள் தேவைப்படவில்லை.

நீ தினங்களைக் கொண்டாடு,
தவறில்லை.

ஆனால் அந்த ஒரு தினத்தோடு
மரியாதையை முடித்து விடாதே.

ஆசிரியர் தினமன்று மட்டும்
ஆசிரியரை வாழ்த்தாதே,
தினம் தினம் வாழ்த்து.
அவர் சொல்லைச் சுமந்து வாழ்.

சிறுவர் தினமன்று மட்டும்
சிரித்து மகிழாதே,
தினம் தினம் கொண்டாடு.

மகனே..! மகளே..!
தினங்கள் பணத்தால்
முடியக் கூடாது,
பொருளால் தீர்மானம் ஆகக்கூடாது.

தினங்கள்
மரியாதையும், அன்பும், சிரிப்பும்
கலந்த ஒரு வாழ்வாய் முடியட்டும்.

இப்படிக்கு
உன் தந்தை

அஸ்ஹர் அன்ஸார்
ஆலோசனை உளவியல் நிபுணர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *