உள்நாடு

முஸ்லிம் பெண் சுகாதார சிற்றூழியர் விவகாரம்; முஸ்லிம் தமிழ் எம்.பீ க்கள் இன்று காலை சுகாதார அமைச்சருடன் பேச்சு

கல்முனை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் முஸ்லிம் இளநிலை ஊழியர்கள் மற்றும் செவிலியர்களின் (Nurse) சீருடை தொடர்பான பிரச்சினைக்கு விரைவான குறுகிய கால மற்றும் நீண்ட கால நிரந்தர தீர்வை வழங்க சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

​இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் சுகாதார அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இணக்கப்பாடு எட்டப்பட்டது. இக்கலந்துரையாடலில் ஆளும் கட்சியின் முஸ்லிம் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

​கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டு வந்த இந்த உணர்வுபூர்வமான விவகாரம் குறித்து அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களும் இதன்போது விரிவாகக் கேட்டறியப்பட்டன. வைத்தியசாலை கட்டமைப்பைச் சீராகப் பேணுதல், சேவைபெறும் அனைத்துத் தரப்பினரின் ஒற்றுமையைப் பாதுகாத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட பெண் உத்தியோகத்தர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைதியான முறையிலும் நடைமுறைச் சாத்தியமாகவும் தீர்வை எட்டுவதன் முக்கியத்துவம் இங்கு வலியுறுத்தப்பட்டது.

​இதற்கமைய, குறித்த பிரச்சினைக்கு உடனடியாகச் நடைமுறைப்படுத்தக்கூடிய குறுகிய கால நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நீண்ட கால நிரந்தரத் தீர்வை அடையாளம் கண்டு, அதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

​ஊடகச் செயலாளர்

சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்

அப்டேட்:

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நியமனம் வழங்கப்பட்ட 9 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்ற சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சி எம்பிக்களுடனான கூட்டத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.

(றிஹ்மி ஹக்கீம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *