உள்நாடு

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்; சுகாதார அமைச்சர், சுமந்திரன் போன்றோர்கள் தலையிட்டு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – எச்.எம்.எம். ஹரீஸ்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் ஏற்பட்டுள்ள மத, கலாசார மற்றும் நிர்வாக ரீதியான சர்ச்சைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க இலங்கை தமிழசு கட்சி செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தலையிட்டு, தமிழ் – முஸ்லிம் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வைத்தியசாலை நிர்வாகத்துடனும் சமூகத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். அதேவேளை, சுகாதார அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு இவ்விடயம் தொடர்பில் இரண்டாவதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அந்த அறிக்கையில், கல்முனை என்பது தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் நீண்டகாலமாக ஒற்றுமையுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வரும் பிரதேசமாகும். இங்கு நிலம், நிர்வாகம், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள போதிலும், அவை மத அல்லது கலாசார முரண்பாடுகளாக மாறுவதற்கு இதுவரை நாம் இடமளித்ததில்லை.

குறிப்பாக, கல்முனை உப பிரதேச செயலகத்தில் மத வழிபாட்டு தளம் அமைத்தது தொடர்பில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையும் பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் ஊடாக சுமூகமாகத் தீர்க்கப்பட்ட அனுபவம் எமக்கு உள்ளது. அதேபோன்று, தற்போதைய கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரத்தையும் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடாக மாற்றாமல், பொறுப்பான முறையில் அணுகி தீர்வு காண வேண்டும்.

இந்த நிலையில், கல்முனை தமிழ் மக்களுக்காக வழக்காட முன்வரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் போன்ற தமிழ் அரசியல் தலைவர் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் பிரச்சினைகளுக்காக நீதிமன்றங்களிலும் அரசியல் ரீதியிலும் வாதாடி வந்த சுமந்திரன் அவர்கள், கல்முனையில் வாழும் தமிழ் மக்களுடன் மட்டுமல்லாமல், இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் மத, கலாசார உரிமைகளையும் சமமாக மதிக்கும் வகையில் இந்த விடயத்தில் ஒரு நல்லிணக்கமான தீர்வை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.

இது ஒரு தனிப்பட்ட சமூகத்தின் பிரச்சினையாகப் பார்க்கப்படக் கூடாது. அரச சேவையில் பணியாற்றும் ஒருவரின் மத மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான பிரச்சினை உருவாகும்போது, அதனை சட்டம், அரச சுற்றறிக்கைகள் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படையில் அணுகுவதே சரியான வழியாகும். சுமந்திரன் போன்ற தமிழ் தலைவர்கள் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவுடனும் இந்த விடயத்தில் முன்னணியில் இயங்கும் நபர்களுடனும் கலந்துரையாடி, ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நியாயமானதும் சட்டபூர்வமானதுமான தீர்வை வழங்க வழியேற்படுத்த வேண்டும்.

கல்முனை கடந்த காலத்தில் பல சவால்களைத் தாண்டியும் நல்லிணக்கத்துடன் பயணித்துள்ளது. அந்த வரலாற்றை பாதுகாத்து, எதிர்கால தலைமுறைக்கு அமைதியானதும் பரஸ்பர மரியாதை கொண்டதுமான கல்முனையை வழங்குவதே நமது பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *