உள்நாடு

அரசின் சமூக நலன்புரிக் கொள்கை மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கப் போதுமானதா? – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி

இலங்கைப் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதாகவும் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. ஆனால் சமூக நலன்புரியின் அடிப்படை நோக்கம் மக்களின் வாழ்வுரிமையை மேம்படுத்துவதும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகும் குடும்பங்களுக்குப் போதுமான பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பதுமாகும். தற்போது அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதோடு, உண்மையான வருமானமும் குடும்பங்களின் கொள்வனவு சக்தியும் வீழ்ச்சி கண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் கடுமையான வாழ்க்கைச் சுமைக்கு முகங்கொடுத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இதனால்தான், அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் சமூக நலன்புரிக் கொள்கைகளும் திட்டங்களும் மக்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உண்மையாகவே மேம்படுத்தவும் போதுமானதாக அமைந்து காணப்படுகின்றதா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (07) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய சமயமே இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்திடம் உள்ள புதிய உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இலங்கைக் குடும்பமொன்று தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான சராசரி வாழ்க்கைச் செலவு என்ன என்பதை இந்த சபைக்கு சமர்ப்பியுங்கள். இந்தச் செலவு சராசரி குடும்பமொன்றின் மாதாந்த வருமானத்துடன் ஒப்பிடும்போது தாங்கிக்கொள்ளக்கூடிய மட்டத்தில் உள்ளதா என்பதற்கான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மதிப்பீட்டை முன்வையுங்கள். கடந்த மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பணவீக்கம் முறையே 5.5%, 6.8% மற்றும் 7.3% ஆக பதிவாகியுள்ள நிலையில், அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற அழுத்தத்தினால் சாதாரண மக்களின் கொள்வனவுச் சக்தி வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில் அரசாங்கத்தின் மதிப்பீட்டை
சமர்ப்பியுங்கள் என்றும் அவர் இங்கு கேட்டுக்கொண்டார்.

🟩 ஏற்கனவே 1,69,5,843 குடும்பங்கள் ஏழ்மை கோட்டுக்குள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனவல்லவா?

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக மக்கள் கடன்களைச் பெரிதும் சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிலையான வைப்புகள் மீதான வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்ததன் மூலம் ஓய்வுபெறைவோர் மற்றும் சேமிப்புக்களை நம்பியிருப்பவர்களின் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளன. இந்த இரண்டு தரப்பினரும் முகங்கொடுக்கும் பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள வேலைத்திட்டம் என்னவென்பதை முன்வைக்குமாறும், 2026 மார்ச் நிலவரப்படி சமூக நலன்புரிப் பயனாளிகள் சபை ஊடாக 1,695,843 குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தொகையை 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளின் எண்ணிக்கைகளுடன் ஒப்பிடும்போது மாறியுள்ள அளவு என்னவென்பதும், இந்த எண்ணிக்கையின் மாற்றத்தினுள் இந்நாட்டின் பொருளாதாரக் சிரமங்களும் வறுமையும் மேலும் வியாபித்து காணப்படுகின்றமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா என்பதையும் அறிந்துகொள்ளும் தேவை காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 வறுமையை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் முன்னேற்றம் எத்தகையது?

பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்நாட்டின் வறுமை தீவிரமாக அதிகரித்து நாட்டின் சனத்தொகையில் 30-40% வீதமாக உள்ளதாகக் கூறுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், ரூ. 25000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ‘பிரஜாசக்தி’ திட்டம் ஊடாக இதுவரை பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கையையும், நிலையான வருமானம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையையும் குறிப்பிட்டுக் காட்டினார். இத்திட்டங்களின் செயலாற்றுகை குறித்து சுயாதீன மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா எனவும், அவ்வாறான அறிக்கைகள் இருப்பின் அவற்றைச் சபையில் சமர்ப்பிக்குமாறும், தேசிய சமூகப் பாதுகாப்புப் கொள்கை மற்றும் உபாயமார்க்கத் திட்டத்தின்படி 2026 ஆம் ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றத்தை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேட்டுக்கொண்டார்.

🟩 IMF இலக்குகளை மீறி எதற்காக வரிகள் அறவிடப்பட்டன?

IMF முதன்மை மீதியை (Primary Balance) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 2.3% ஆக இருக்க வேண்டும் எனக் கூறிய போதிலும், அதனை 5.4% ஆக உயர்த்தியதற்கான காரணம் என்னவென்று கேள்வியெழுப்பிய அவர், அரச வருமான இலக்கை 13.9% இலிருந்து 15.4% ஆக உயர்த்தியது எதற்காக என்றும் கேள்வி எழுப்பினார். இந்த வகையில் வரிச்சுமையை அதிகரித்து நாட்டின் மக்களை அழுத்தத்திற்குள்ளாக்குவது ஏன் எனத் தான் கேள்வி எழுப்புவதாகவும், 2025 ஆம் ஆண்டுக்கான வீட்டுவசதி வருமானச் செலவு மதிப்பீட்டு முடிவுகள் 2026 ஒக்டோபரில் வெளியிடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதால், இதன் ஆரம்பத் தரவுகளைச் சபையில் சமர்ப்பிக்குமாறும், இந்தத் தரவுகள் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படவுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *