Thursday, September 24, 2026
உள்நாடு

நாவலடி வட்டை விவசாயிகளின் அனுமதிப்பத்திரங்கள் விரைவில் வழங்கப்படும்- உதுமாலெப்பை எம்.பி யின் கேள்விக்கு பிரதி அமைச்சர் சபையில் உறுதி அளித்தார்.

பாராளுமன்ற அமர்வு இன்று (23.09.2026) கௌரவ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரிடம் வாய்மூல வினாக்களாக,

அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் நாவலடி வட்டை பிரதேசத்தில் 1986-1989, 1991 மற்றும் 1997 ஆண்டுகளில் அம்பாறை மாவட்ட செயலாளரால் காணிக் கச்சேரி நடாத்தப்பட்டு காணி ஆணையாளர் நாயகத்தின் அங்கீகாரத்தின் பிரகாரம் அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஊடாக 21 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 21 உத்தரவுப்பத்திரங்களுக்கான பிரதிகளை இப்பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதுடன் நீண்டகாலமாக விவசாய செய்கையில் ஈடுபட்ட 21 விவசாயிகளை விவசாயம் செய்வதனை இடைநிறுத்தப்பட்டது. இதன்பின் தமன பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் இக்காணிகளுக்குள் அத்துமீறி 21 விவசாயிகளின் காணிகளை பிடித்து விவசாயம் செய்தனர். இதன்பின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உப-குழு தெரிவு செய்யப்பட்டதுடன் இக்குழுவில் உறுப்பினராக நானும் செயற்பட்டு உத்தரவுப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள 21 விவசாயிகளுக்கு 2 ஏக்கர் வீதமும் காணிகளில் அத்துமீறிய தமன பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 1.5 ஏக்கர் வீதம் வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
என இன்றைய பாராளுமன்ற அமர்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை விவசாய அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண, இறக்காம பிரதேச நாவலடி வட்டை 21 விவசாயிகளுக்கு கடந்த காலத்தில் அம்பாறை மாவட்ட செயலாளரினால் வழங்கப்பட்டதாகவும் தமன இறக்காம பிரதேச செயலக எல்லைப் பிரச்சினைகள் உள்ளதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை உரையாற்றுகையில், தமன, இறக்காம பிரதேச எல்லைகள் தொடர்பான செயல்பாடுகளுக்கும் இக்காணிகளின் பிரச்சினைகளுக்கும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட 21 விவசாயிகளுக்கான புதிய உத்தரவு பத்திரம் வழங்கலாம் எனவும் இறக்காம பிரதேச நாவலடி வட்டை 21 விவசாயிகளுக்கான 2 ஏக்கர் வீதம் வழங்குவதற்கான காணிகளுக்கான உத்தரவுப்பத்திரங்களை எவ்வளவு காலத்தில் வழங்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

விரைவில் நில அளவை திணைக்களத்தின் சிபாரிசுடன் அமைச்சினூடாக பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர்கள் தொடர்பான அதிகாரிகளுடன் கலந்துரையாடி மிகக் குறுகிய காலத்திற்குள் விவசாயிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக சாதகமான பதிலளித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *