மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் போட்டியில் பங்கேற்க 4 இலங்கையர்கள் தெரிவு – போட்டி நாளை ஆரம்பம்
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார மற்றும் தஃவா அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் பங்கேற்க முதற் தடவையாக நான்கு இலங்கையர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கண்டி கல்கின்னையைச் சேர்ந்த ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸாவின் மாணவரான முஹம்மது இம்தாத் இயாஸ் முஹம்மத், புத்தளத்தினைச் சேர்ந்த அடுலுகம தாரு ஆயிஷா மத்ரஸாவின் மாணவியான எம்.ஏ. பாத்திமா நிலாமா, தெஹிவளையினைச் சேர்ந்த தாருல் உலூம் மத்ரஸாவின் மாணவரான முஹம்மத் இப்பத் சயீத் மற்றும் கண்டி, எலமல்தெனியவினைச் சேர்ந்த உம்முல் குரா மகளிர் அரபுக் கல்லூரி மாணவியான மும்தாசா மன்சூர் ஆகியோரே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை வழியனுப்பும் நிகழ்வு கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் நேற்று (04) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இலங்கைக்கான சவூதி அரேபியாவின் பதில் தூதுவர் யசீர் அப்துல்ரஹ்மான் அல்ஹாஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் தூதரக உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது போட்டியாளர்களுக்கும், அவர்களுடன் பயணிக்கவுள்ள பெற்றோர்களுக்குமான பிரயாண டிக்கெட் மற்றும் விசா ஆகியவற்றுக்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டிக்கு இலங்கையிலிருந்து வருடாந்தம் ஒருவர் மாத்திரமே பங்கேற்பது வழமையாகும்.
எனினும் 46ஆவது தடவையாக இந்த முறை நடைபெறவுள்ள குர்ஆன் மனனப் போட்டிக்கு நான்கு இலங்கையர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களுடைய பெற்றோர்களும் இணைந்து பயணிப்பதற்கு தேவையான முழு வசதிகளும் இலவசமாக செய்துகொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதற் தடவையாக இந்த வருடமே இந்த சர்வேதச போட்டியில் பெண்கள் பங்குபற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையைச் சேர்ந்த இரு மாணவிகள் இந்த குர்ஆன் மனனப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
இப்போட்டி நாளை 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 19ஆம் நிறைவடையவுள்ளது.
இதில் ஆண்களுக்கான போட்டி புனித மக்கா ஹரம் ஷரீபிலும் பெண்களுக்கான போட்டி மக்கமா நகரிலுள்ள ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டேலிலும் இடம்பெறவுள்ளது.
இந்த வருடம் 133 நாடுகளிலிருந்து 334 ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த வருடம் நடத்திய குர்ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களே மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் பங்கேற்பதற்காகச் செல்லும் போட்டியாளர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கும், மக்கா மற்றும் மதீனா நகரிலுள்ள முக்கிய இடங்களை விஐயம் செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.








