உள்நாடு

ஷுஹதாக்களின் தியாகம் முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும் கண்ணியத்தையும் பாதுகாத்தது; முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வுக்கே ஆதரவு – கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி.

காத்தான்குடி ஹுசைனியா ஜும்ஆப் பள்ளிவாசலில் இன்று (03) நடைபெற்ற 36ஆவது தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத, மனிதாபிமானப் பேரவலமாகும் எனத் தெரிவித்தார்.

வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட அந்தக் கொடூரமான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் ஷஹீத்களாகியதோடு, பலர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்நாள் முழுவதும் அதன் வலியோடு வாழ்ந்து வருகின்றனர் எனக் குறிப்பிட்ட அவர், எந்தவித குற்றமும் செய்யாத நிலையில் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் இலக்காகக் கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“அந்த ஷுஹதாக்கள் சிந்திய இரத்தம்தான் இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் தமது பூர்வீக மண்ணில் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது. அவர்களின் தியாகத்தை என்றும் நன்றியுடனும் மரியாதையுடனும் நினைவுகூர வேண்டும், அவர்களது குடும்பங்களுக்காக தொடர்ந்தும் பிரார்த்திக்க வேண்டும்.

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் பாரிய இழப்புகளும் மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது என்றும், அவற்றை எதிர்கால தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடமாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது.

இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சமூகத்தின் தியாக வரலாறு முழுமையாகத் தெரியாத நிலை காணப்படுகிறது. பல ஆயிரம் உயிர்களையும் எண்ணிலடங்கா சொத்துக்களையும் இழந்த முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றை நினைவூட்டும் தேசிய நினைவு நாளாக காத்தான்குடி ஷுஹதாக்கள் ஞாபகார்த்த தினம் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும், இந்த நினைவேந்தல் நிகழ்வை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் காத்தான்குடி தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தினருக்கு அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

நாட்டில் அனைத்து சமூகங்களுடனும் நல்லிணக்கத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கே முஸ்லிம் சமூகம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்த அவர், இனி ஒருபோதும் இத்தகைய மனிதாபிமானப் பேரழிவுகள் மீண்டும் நிகழாத வகையில் நீதி, பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை நிலைநாட்டப்பட வேண்டும் என்றார்.

அதேவேளை, நாட்டில் முன்வைக்கப்படும் எந்தவொரு அரசியல் தீர்வாக இருந்தாலும் அது முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகள், பாதுகாப்பு, இருப்பு, நில உரிமைகள் மற்றும் பாரம்பரிய வாழ்விடங்களை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைய வேண்டும் என வலியுறுத்திய அவர், அவ்வாறான தீர்வுகளுக்கே முஸ்லிம் சமூகம் தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம் மக்களின் உரிமைகளை எவருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தியதோடு, எந்த அரசியல் தீர்வும் நிலையானதாகவும் நீதியுடனும் அனைத்து மக்களுக்கும் சமமான பாதுகாப்பை வழங்குவதாகவும் இருக்க வேண்டும் என்றார்.

அரச நிர்வாகங்களின் சில நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் கவலை வெளியிட்டார். பல நூற்றாண்டு வரலாற்றுச் சான்றுகளைக் கொண்ட ஹுசைனியா பள்ளிவாசல் உள்ளிட்ட மத மற்றும் பாரம்பரிய சொத்துக்கள் தொடர்பிலும், மஞ்சந்தொடுவாய் போன்ற பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் காணிகள் தொடர்பிலும் உரிய வரலாற்று மற்றும் சட்ட ஆவணங்கள் மதிக்கப்பட வேண்டிய அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சமூக நீதியை உறுதிப்படுத்தும் வகையிலான அதிகாரப் பகிர்வும் சட்டப் பாதுகாப்பும் ஏற்படுத்தப்படும்போதுதான் நிலையான அமைதியும் நிம்மதியும் நாட்டில் உருவாகும் எனக் குறிப்பிட்ட அவர், ஷுஹதாக்களின் தியாகம் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பான வாழ்விற்கான பொறுப்புணர்வை மீண்டும் நினைவூட்டுகின்றது என்றும் தெரிவித்தார்.

உரையின் நிறைவில், ஷுஹதாக்களின் உயரிய தியாகத்தை நினைவுகூர்ந்து அவர்களுக்காக விசேட பிரார்த்தனைகளை மேற்கொண்டதுடன், இந்த நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்திய காத்தான்குடி ஷுஹதாக்கள் நிறுவனம் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *