உலகம்

இன்று 96வது தேசிய தினத்தை வெகு விமர்சையாகக்கொண்டாடும் சவுதி அரேபியா

“2030 ஐ வெற்றியாக்க தொடர்ந்தும் முன்னேற்றப் பாதையில் சவுதி அரேபியா”

“சவுதி அரேபியாவின் 96வது தேசிய தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள்”

“இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் இப்னு சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபிய துனைத் தூதுவர் யாசிர் அப்துர் ரஹ்மான் அல் ஹாஸிமி ஆகியோருக்கும் சவுதி அரேபிய நாட்டு மக்களுக்கும் சவுதி அரேபியாவின் 96வது தேசிய தினத்தை முன்னிட்டு தனிப்பட்ட ரீதியிலும் எமது நிறுவனம் சார்பாகவும், இலங்கை மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்”

“பொருளாதார ரீதியிலும், அபிவிருத்தியிலும் பாரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளதோடு, மனிதாபிமானத்தில் என்றும் முன்நிற்கின்ற சவுதி அரேபியாவின் அபார வளர்ச்சியைக் கண்டும் பெருமிதம் அடைகின்றோம்”

முன்னேற்றம், பாரிய வளர்ச்சி, மறுமலர்ச்சி மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய எண்ணற்ற சாதனைகள் மூலம் சவுதி அரேபியா உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் சவுதி அரேபிய மன்னரதும் இளவரசரதும் சிந்தனையில் உதயமான ‘நியோம்’, ‘த லைன்’, ‘விஷன் 2030’ 2030 எக்ஸ்போ போன்ற பாரிய பொருளாதார திட்டங்கள் சவுதியின் நற்பெயரை பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் மென்மேலும் உயர்த்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் மூலகர்த்தா மன்னர் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆவார். அவருக்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைவரும் சவுதியின் அபரிமித அபிவிருத்திக்கு அயராது உழைத்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் என்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பொருளாதார ரீதியில் இவ்வாறு பாரிய வளர்ச்சியடைந்திருக்கும் சவுதிக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவானது மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அந்த வகையில் இலங்கைக்கு பாரிய உதவி ஒத்துழைப்புக்களை நல்கி வருகிறது சவுதி அரேபியா.

குறிப்பாக சவுதியின் நிதியுதவியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காக்கை வலிப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்கவென அதிநவீன வசதிகள் கொண்ட நரம்பியல் சிகிச்சை பிரிவு, இலங்கையிலேயே மிக நீளமான கிண்ணியா பாலம், பதுளை – செங்கலடி மற்றும் மஹியங்கனை நெடுஞ்சாலை, வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், நகரமயமாக்கல் சூழலை உருவாக்குவதற்காகவும் பல நவீன கட்டிடங்களும் வசதிகளும் நிர்மாணிக்கப்பட்டன. மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் கற்றல் தேவைகளுக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய நூலகக் கட்டிடம், பல்கலைக்கழகத்திற்கும் வணிகச் சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் மையம், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நகர வசதிகள் மையம்,கல்விப் பணியாளர்களுக்கான தங்கும் விடுதிகள், (Academic Staff Quarters), நிர்வாகப் பணியாளர்களுக்கான தங்கும்விடுதிகள் (Executive Staff Quarters),கல்வி சாரா ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள் (Non-Academic Staff Quarters), துணைவேந்தர் உத்தியோகபூர்வ இல்லம் என்பன இந்த நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வயம்ப பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு கடந்தாண்டு திறந்து வைக்கப்பட்டது.

அதேநேரம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் 500 மாணவர்களுக்கான விடுதிகள், 1,060 இருக்கைகள் கொண்ட அரங்கம், 6 விரிவுரை மண்டபங்கள், நூலகம் மற்றும் நவீன ஆய்வகங்களை உள்ளடக்கி புதிய மருத்துவ பீட வளாகம் அமைக்கப்பட்டு கடந்த ஜூலையில் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இலங்கைக்கு பல்வேறு விதமான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கிறது சவுதி அரேபியா. குறிப்பாக சுனாமி அனர்த்தத்தின் போதும் கொரோனா பாதிப்புக்களின் போதும் தாராளமாக உதவியுள்ள சவுதி, கடந்தாண்டு தித்வா புயலின் விளைவாகப் பாதிக்கப்பட்ட வீதிகளைப் புனரமைக்கவென மேலதிகமாக ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கியது.

இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ள சவுதி அரேபியாவின் சுற்றுலாப் பயணிகளது வருகையும் இலங்கை பொருளாதாரத்தின் பாரிய வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தது.

இவை இவ்வாறிருக்க, சவுதி அரேபிய பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்கள் உயர்கல்வியைத் தொடரவென ஒவ்வொரு வருடமும் புலமைப் பரிசில்கள், நோன்பு காலங்களில் இலவசமாக விநியோகிக்கவென தொன்கள் கணக்கில் இலவசமாகப் பேரீத்தம் பழங்கள், பாடசாலை மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்துக்கு 300 தொன் பேரீத்தம் பழங்கள், இலங்கையில் முதற் தடவையாக பெருந்தொகை பணப்பரிசில்களுடன் கூடிய அல் குர்ஆன் மனனப் போட்டி, இலங்கை – சவுதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு ஒன்றியம், இலங்கை – சவுதி அரேபிய பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள், எல்லைகள் இல்லாத மனித நேயத்தை நோக்கி… என்ற தொனிப்பொருளில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் மூலம் இலங்கையில் இனபாகுபாடின்றி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களுக்கு இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்களை நடத்தி பார்வை இழந்துள்ளவர்களுக்கு பார்வை பெற்றுக் கொடுக்கின்றமை, சூடான் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான இலங்கையரை மீட்டெடுத்து எமது நாட்டுக்கு அனுப்பி வைத்தமை, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அனைத்து முன்னெடுப்புகளிலும் இலங்கையின் பக்கம் நின்றமை என எண்ணிலடங்கா உதவி ஒத்துழைப்புக்களை நல்கி வருகின்றது சவுதி அரேபியா.

அத்தோடு இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தி மேம்படுத்துவதில் முன்னாள் தூதுவரான காலித் ஹமூத் அல் கஹ்தானி ஆற்றியுள்ள பங்களிப்புக்கள் என்றும் நினைவுகூரத்தக்கவையாகும்.

மத்திய கிழக்கில் பொருளாதார ரீதியில் பாரிய வளர்ச்சிகளைப் பெற்றுள்ள சவுதி, முஸ்லிம்கள் தங்கள் பிரதான மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் இரு முக்கிய புனிதஸ்தலங்களைக் கொண்ட தேசமாகவும் திகழுகிறது. அதனால் மத்திய கிழக்கில் மாத்திரமல்லாமல் முழு உலகிலும் சவுதி தனி மதிப்பையும் மரியாதையையும் பெற்று விளங்குகிறது.

உலக முஸ்லிம்களின் சகல விடயங்களிலும் அக்கறை செலுத்தி அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் முன்நிற்கின்ற நாடாக விளங்குகிறது சவுதி. அத்தோடு நில்லாது முஸ்லிம் அல்லாத நாடுகளின் நலன் விடயங்களிலும் சவுதி மிகுந்த அக்கறை செலுத்தி அந்தந்த நாடுகளோடு பரஸ்பர உறவுகளைப் பேணி வருகிறது. உலக வல்லரசு நாடுகளுடன் மிகவும் வலுவான உறவுகளைப் பேணிவரக்கூடிய நாடாகவும் சவுதி இருக்கிறது. அதனால் தான் வல்லரசு நாடுகள் கூட சவுதி அரேபியாவின் தயவை நாடி நிற்கிறது எனலாம்.

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கியெறிந்து சகிப்புத்தன்மை சகவாழ்வை உலகில் நிலைநாட்டிய மிகச் சிறந்த நாடாகவும், போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பில் வெற்றிகண்ட நாடாகவும் விளங்கும் சவுதி, தீவிரவாத்ததை ஒழித்துக் கட்டும் நோக்கிலான சர்வதே மாநாடுகளை சவுதி அரேபியாவிலும் உலகின் பல நாடுகளிலும் வருடாவருடம் தொடர்ந்தும் நடாத்தி வருகிறது. இதன் நிமித்தம் புனித மக்காவிலும் சர்தேச மாநாடுகள் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு நில்லாது நிர்க்கதியான நாடுகளுக்கு உதவுதல், அந்நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவென அந்நாடுகளின் திறைசேரிகளில் வட்டியில்லா நீண்ட கால தவணையில் கடன் அடிப்படையில் பல பில்லியன்களை வைப்பிலிடுதல், உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளில் தலையிட்டு அங்கு சமாதானத்தை ஏற்படுத்த உதவுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் சவுதி தவறுவதில்லை.

பலஸ்தீன் மற்றும் யெமன் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் சாதனை படைக்கும் நாடாகவும் விளங்குகிறது சவுதி அரேபியா.அதேவேளை நவீன கண்டுபிடிப்புகள், ஏ.ஐ தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு போன்றவற்றிலும் சவுதி அரேபியா பெரிதும் முன்னேற்றமடைந்த நாடாக உள்ளது. இது தொடர்பான சர்வதேச மாநாடுகளை நடாத்தி உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளவும் செய்கிறது சவுதி.

சவுதி அரேபியா அரசியலில் மிகப் பலம் வாய்ந்த நாடாகும். குறிப்பாக மத்திய கிழக்கின் ராஜா என்றால் கூட அது மிகப் பொருத்தமானது. ஏனெனில் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகள் அடங்கலாக உலக முஸ்லிம் நாடுகளும் சவுதி அரேபியாவைத் தங்களது தலைமைத்துவ நாடாகப் பார்க்கிறது.

சவுதி அரேபியாவை பொருளாதார மற்றும் இதர அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கில் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆரம்பித்த விஷன் 2030, எக்ஸ்போ 2030 போன்றன இதில் பாரிய மைற்கற்களாகும். சவுதியின் விஷன் 2030 என்பது ஒரு துடிப்பானதும் வளமானதுமான பொருளாதாரம் மற்றும் இலட்சிய தேசத்ததைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட பயணத்திற்கான ஒரு வரை படமாகும். அதே போல் எக்ஸ்போ 2030 முன்னோடியான வகையில் தேசிய மாற்றத்தை அடைவதற்கான சவுதி அரேபியாவுக்குக் கிடைக்க இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

சவுதி பொருளாதார ரீதியில் தன்னிறைவடைந்து வரும் நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற மிகப் பெரும் வல்லரசுகள் சவுதியின் பொருளாதாரக் கொள்கையோடு இணைந்து தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவென மிக நெருக்கமாக செயற்படுகின்றன. இதற்கு சவுதி -பிரான்ஸ், சவுதி – சீனா, சவுதி – ரஷ்யா, சவுதி – பிரித்தானியா மற்றும் அண்மையில் நடந்த சவுதி – இந்தியா ஜி 20 பொருளாதார உச்ச மாநாடுகளை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். சுருங்கக் கூறின் சவுதி அரேபிய அரசு உலகில் அனைத்து நாடுகளுக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தாக்கம் செலுத்தும் மிக முக்கியமான நாடாகத் திகழ்கிறது.

உலகிலுள்ள பெற்றோலிய வள நாடுகளில் ஒன்றாக இருந்த போதிலும் பெற்றோலிய வளம் சாராத உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சவுதி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இரு புனித பள்ளிவாசல்களின் காவலரும், மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோர் இவ்விடத்தில் அதிக அக்கரை எடுத்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் பதவிக்கு வந்த பின்னர் சவுதியின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி முக்கிய இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான சூழலில் சவுதி அரேபியா தனது 96 வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. இதன் நிமித்தம் இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், பட்டத்து இளவரசர் முஹம்மத் இப்னு சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபிய துணைத் தூதுவர் யாசிர் அப்துர் ரஹ்மான் அல் ஹாஸிமி ஆகியோருக்கும், சவுதி அரேபிய மக்கள் அனைவருக்கும் தனிப்பட்ட ரீதியிலும் எமது நிறுவனம் சார்பாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களுக்கு ஈடேற்றமான வாழ்வையும் நீண்ட ஆயுளையும் சிறப்பான எதிர்காலத்தையும் தந்து மென்மேலும் உலக மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் சேவை செய்ய நல்ல திடகாத்திரத்தையும் தரவும், சவுதி-இலங்கை நட்புறவு என்றும் நிலைத்து வலுவானதாக இருக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தின்றேன்.

அஷ்ஷைக் எம்.எச்.ஷைஹுத்தீன் பி.ஏ. மதனி
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *