உள்நாடு

அம்பாறை கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை பாராளுமன்ற ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் ஹந்துன்நெத்தி பணிப்பு

அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஹிங்குராணை சீனி கம்பனி நிர்வாகத்திற்கும் மாவட்ட கரும்பு செய்கையாளர்களுக்குமென விஷேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அமைச்சரின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளையும் அப்பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவும் திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெப்பைவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்தே அமைச்சர் மேற்படி கூட்டத்திற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு செயலாளர் திலகா ஜயசுந்தரவுக்கு ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய உதுமா லெப்பை எம்,பி, அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கடந்த ஆட்சிக் காலங்களில் முன்னாள் அமைச்சர்கள் பலரிடம் எடுத்துக்கூறிய போதிலும் பாதிக்கப்பட்ட கரும்புச் செய்கையாளர்களுக்கு எவ்வித நியாயமும் கிடைக்கவில்லை.

தற்போதைய அரசாங்கத்தின் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவும் நானும் அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உங்களது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு அமைய நீங்கள் நேரில் வருகை தந்து விஷேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை ஏற்பாடு செய்து கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் உண்மையான தன்மையினை அறிந்து அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான திட்டங்களை முன்வைத்தீர்கள். அதற்காக எமது மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் சார்பில் விஷேட நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் எமது மாவட்டத்திற்கு வருகை தந்த நடத்திய மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தின் போதும், இம்மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அதற்கமைய ஜனாதிபதி, ஹிங்குரானை சீனிக் கூட்டுத்தாபன கம்பனியின் பணிப்பாளரிடம் கரும்பு செய்கையாளர்கள் இலாபம் அடையக் கூடிய வகையில் ஹிங்குரானை சீனிக் கூட்டுத்தாபன கம்பனி செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியதோடு அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்களுக்கும் ஹிங்குரானை சீனிக் கம்பனிக்கும் இடையில் விஷேட கூட்டமொன்றை நடாத்தி புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டும் இதுவரையும் இக்கூட்டம் நடாத்திருப்பதாகவும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்தே அமைச்சர் ஹந்துன்நெத்தி மேற்படி கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார் என்று பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *