உள்நாடு

டெங்கற்ற கிழக்கு; அட்டாளைச்சேனையில் டெங்கு விழிப்புணர்வு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர், சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம் அவர்களின் ஆலோசனையிலும், வழிகாட்டலிலும், இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் முன்னெடுப்பில் கிழக்கு மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “டெங்கற்ற கிழக்கு” வேலைத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு மற்றும் மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் ​ஆர்.எம்.நழீல், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், செயற்றிட்ட முகாமையாளர் எம்.ஐ.ஸாஹிர், பிரதேச சபை உறுப்பினர்கள், துறை சார்ந்த முக்கியஸ்தர்கள், ஜம்இய்யத்துல் உலமா சபையினர், அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம், விளையாட்டு கழகங்கள், பொது இயக்கங்கள் மற்றும் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு நடவடிக்கைகள், மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இளைஞர்களின் தன்னார்வப் பங்களிப்பு, உள்ளூராட்சி மன்றங்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மற்றும் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

எதிர்வரும் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேசத்தை இரண்டு வலயங்களாகப் பிரித்து சிரமதானத்தை திறம்பட நடைமுறைப்படுத்துவது எனவும் அதன் பின்னர் அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதான வீதியிலிருந்து அல் இபாதா கலாசார மன்றத்தின் மார்க்க சொற்பொழிவு இடம்பெறும் இடத்தில் நிறைவு செய்வது தொடர்பாகவும் விரிவான கலந்தாலோசனைகள் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *