உள்நாடு

“அல் அகீதா அஸ்-ஸஹீஹா” நூல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 1 ஆம் தேதி BMICH இல்

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாவை, ஆதாரபூர்வமான இஸ்லாமிய நூல்களையும் அஷ்அரி மரபுவழி அறிஞர்களின் விளக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள “அல் அகீதா அஸ்-ஸஹீஹா” என்ற நூலின் உத்தியோகபூர்வ வெளியீட்டு விழா, ஆகஸ்ட் 1 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல், பிற்பகல் ஒரு மணி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் (BMICH) லோட்டஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நூலை பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர் (ஹஸனி) அவர்கள் தொகுத்து எழுதியுள்ளார். சமகாலத்தில் அகீதா தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு, அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மரபுவழி நிலைப்பாட்டை தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் விளக்கும் நோக்கில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு நாட்டின் பல்வேறு தரீகாக்களைச் சேர்ந்த முன்னணி மார்க்க அறிஞர்கள் அணிந்துரைகளையும் வாழ்த்துரைகளையும் வழங்கியிருப்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

நிகழ்வின் தலைமைத்துவத்தை காலி அலீய்யா இஸ்லாமிய சட்டக்கல்லூரி பணிப்பாளர் காலி மாவட்ட உலமா சபைத் தலைவருமான சங்கைக்குரிய கலீபதுல் குலபா மௌலவி அல்ஹாஜ் முஹம்மத் ஸூஹ்ர் (பாரி) அவர்கள் வகிக்க, நூலை தென்இந்தியாவின் முன்னணி இஸ்லாமீய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் டாக்டர் ஸதீதுத்தீன் (பாகவி- பீ.எச்.டி) அவர்கள் வெளியிட்டு வைக்கவுள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சீனன் கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயலாளருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ்ஷெய்க் அல்ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல்ஹஸன் (நளீமி) வரவேற்புரை நிகழ்த்த
மேலும், நிகழ்வில் விசேட உரைகளை கடார் ஹமாத் பின் கலீபா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக பேராசிரியர் அல்-ஆலிம் டாக்டர் எம்.எம். தீன் முஹம்மத் மீரா ஸாஹிப் (அல்-அஸ்ஹரி), கடார் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் அல் ஆலிம் ஏ.பி.எம். மஃரூஃப் ஆதம்பாவா (அல்-அஸ்ஹரி) மற்றும் கொழும்பு உம்மு ஸாவியா அஜ்வாத் அல் பாஸி அரபுக் கல்லூரி முதல்வர் கலீஃபதுஷ் ஷாஸுலி மௌவலி அல்ஹாஜ் எம். அஹ்மத் சூபி (மஹ்லரி) ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சங்கை மிகு சேகுமார்கள், உலமாக்கள், கல்வியியலாளர்கள், அரபுக் கல்லூரி அதிபர்கள் மற்றும் சமயப் பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கான ஏற்பாடுகளை “அல் அகீதா அஸ்-ஸஹீஹா” நூல் வெளியீட்டு விழா – 2026 குழு மேற்கொண்டு வருகிறது.

பேருவளை பீ.எம். முக்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *