உலகம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்தால்தான் முழு வெற்றி – தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

சென்னை வண்ணாரப்பேட்டை அருகே மாணவர் இந்தியா இயக்கம் ஏற்பாடு செய்த நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், நீட் தேர்வு முற்றிலும் நீக்கப்படும் வரை போராட்டம் தொடர வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் விளைவாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், டெல்லி போராட்டத்திற்கும் தமிழ்நாட்டில் நடைபெறும் நீட் எதிர்ப்பு இயக்கத்திற்கும் அடிப்படையான நோக்கத்தில் வேறுபாடு இருப்பதாக தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற போராட்டம் நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை மையமாகக் கொண்டதாக இருந்தது. அமைச்சர் பதவி விலகியதையடுத்து அங்குள்ள போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் நிலைப்பாடு வேறுபட்டது என்றும், நீட் தேர்வு என்ற முறையே ஒழிக்கப்பட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் அவர் விளக்கினார்.

“கொசுக்களை ஒழிப்பதல்ல, கொசுக்கள் உருவாகும் சாக்கடையையே மூட வேண்டும் என்பதே எங்கள் அணுகுமுறை. அதுபோல நீட் தேர்வில் உள்ள குறைபாடுகளை மட்டும் சரிசெய்வது போதாது; நீட் முறையே ரத்து செய்யப்பட வேண்டும். தற்போது கிடைத்திருப்பது அரை வெற்றிதான். நீட் முழுமையாக நீக்கப்பட்டால்தான் அது முழு வெற்றியாகும்,” என்று தமிமுன் அன்சாரி கூறினார்.

மேலும், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்றதை மதிப்பதாக தெரிவித்த அவர், அந்தப் போராட்டத்தை வழிநடத்தியவர்களின் செயற்பாடுகள் குறித்து தங்களுக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக துணைப் பொதுச் செயலாளர் கலைக்குயில் இப்ராகிம், திமுக சார்பில் வழக்கறிஞர் அலிம் அல் புகாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சசி பேரறிவாளன், எஸ்.டி.பி.ஐ. சார்பில் கோல்டு ரபீக் மற்றும் மாணவர் இந்தியா தலைவர் பைசல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *