உள்நாடு

அஹதிய்யா சம்மேளனத்தின் 75 ஆவது பவள விழா நிகழ்வுகள் கொழும்பில்

இலங்கை வரையறுக்கப்பட்ட இஸ்லாமிய போதனா கழகம்
மற்றும் அகில இலங்கை அஹதிய்யா அறநெறிப் பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் 75ஆவது ஆண்டு பவள விழா நாளை மறுநாள் ( 25) சனிக்கிழமை கொழும்பு, மருதானை எல்பில்ஸ்டன் திரையரங்கு மண்டபத்தில் இடம்பெற இருப்பதாக ஊடக இணைப்பாளரும் சம்மேளனத்தின் தேசிய பிரதித் தலைவருமான ஆசிரியர் பாருக் பதீன் தெரிவித்தார்.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் கெளரவ கினிதும சுனில் செனவி அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.


அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

“உங்களில் நம்பிக்கை கொண்டவர்களையும் அறிவு வழங்கப்பட்டவர்களையும் அல்லாஹ் பல படிகள் உயர்த்துகின்றான்.”
(அல்குர்ஆன் 58:11)

இறைநம்பிக்கை, உயரிய ஒழுக்கம், நற்சிந்தனை மற்றும் இஸ்லாமிய வாழ்வியலை இளம் தலைமுறையின் உள்ளங்களில் வேரூன்றச் செய்யும் உயரிய நோக்கத்துடன் 1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அஹதிய்யா அறநெறிப் பாடசாலை, இன்று தனது எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பவள விழாவைக் கொண்டாடுவது, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சமயக் கல்வி வரலாற்றில் மறக்க முடியாத பொன்னான மைல் கல்லாகும்.

எழுபத்தைந்து ஆண்டுகளாகத் தொடரும் இப்புனிதப் பயணத்தில், ஆயிரக்கணக்கான மாணவர்களின் இதயங்களில் அல்குர்ஆனின் ஒளியையும், நபிவழியின் நெறியையும், உயரிய பண்பாட்டையும் விதைத்து, சமூகத்திற்குப் பயனளிக்கும் நல்லொழுக்கமிக்க தலைமுறையை உருவாக்கிய இந்நிறுவனத்தின் சேவை அளப்பரியது. இதன் பின்னணியில் உழைத்த முன்னோடிகள், உலமாக்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் சமூகத்தின் நன்றிக்கும் பாராட்டிற்கும் உரியவர்களாவர்.

பவள விழாவை முன்னிட்டு, 25வருடங்களுக்கு மேல் நீண்டகால அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஆசிரியர்களைக் கௌரவித்தல், தேசிய மட்டத்தில் இடைநிலை சான்றிதழ் பரீட்சையில் TOP-10 இல் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டுதல், ஸஹீஹுல் புஹாரி பாடநெறியில் சிறந்தTOP-10 பெறுபேறுகளைப் பெற்ற ஆசிரியர்களை கௌரவித்தல், ஸஹீஹுல்புஹாரி நூல்வெளியீடு, மேலும் 75ஆவது ஆண்டு நினைவு முத்திரை மற்றும் கவர், 75ஆவது நினைவு மலர் வெளியீடு போன்ற நிகழ்வுகள், அறிவையும் சேவையையும் மதிக்கும் இந்நிறுவனத்தின் உயரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் அரிய முயற்சிகளாகும்.

ஜூலை 25 ஆம் திகதி, சனிக்கிழமை, கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் தேசிய தலைவர் எம்.ஆர்.எம்.
ஸரூக் அவர்களின் தலைமையில் எம்.எப்.எம்.
பாஹிம், எம்.எச்.எம்.உவைன்,
ஏ.எல்.எம். அஸ்வர், பாரூக்பதீன், அஷ்ஷேய்க் யூ.எல்.றிபாய்தீன், அஷ்ஷேய்க் அக்ரம்ஜுன்ட், ஹிஸாம் எம்.ஸுஹைல் ஆகிய நிருவாக குழுவினரின் ஒத்துழைப்புடன் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.


பிரதம அதிதியாக புத்தசாசன கலாசார சமய மதவிவகார அமைச்சர், கலாநிதி ஹீனிதும சுனில் செனிவி, கெளரவ அதிதியாக முஸ்லிம் சமய கலாசார பிரதி அமைச்சர் அஷ்ஷேய்க் முனீர் முழப்பர், விஷேட அதிதியாக ஜாமிஆ நளீமிய்யா கலாபீட பிரதானி ஏ.சீ.அகார் முஹமட்
சிறப்பதிதிகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எஸ்.எம்.நவாஸ், பிரதிப் பணிப்பாளர்களான என்.நிலூபர், எம்.ஏ.அஹமட், உலமாக்கள்,
கல்வியியலாளர்கள், தொழிலதிபர்கள் மாவட்ட சம்மேளன பிரதிநிதிகள்,
மாணவர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

அஹதிய்யா அறநெறிப் பாடசாலையின் 75ஆவது ஆண்டு பவள விழா, கடந்த கால சாதனைகளைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறையினரை அறிவு, ஒழுக்கம், இறையச்சம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் உருவாக்கும் புதிய வரலாற்றுப் பயணத்தின் தொடக்கமாகவும் அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உங்களில் சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்று, அதைப் பிறருக்குக் கற்பிப்பவர்களே.”
(ஸஹீஹுல் புகாரி)

இந்த நபிமொழியின் வெளிச்சத்தில் நோக்கும்போது, அஹதிய்யா அறநெறிப் பாடசாலைகள் ஆற்றி வரும் பணி ஒரு கல்விச் சேவையாக மட்டுமன்றி, தலைமுறைகளை வழிநடத்தும் தொடர்ச்சியான ஸதகதுல் ஜாரியாவாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ், இம்மகத்தான பணியில் பங்களித்த அனைத்து முன்னோடிகள், உலமாக்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரின் நற்சேவைகளையும் பொருந்திக்கொள்வானாக!

அஹதிய்யா அறநெறிப் பாடசாலையின் கல்விப் பணியை மேலும் பறக்கத்துடனும் சிறப்புடனும் தொடர அருள்புரிவானாக!

அறிவிலும், ஒழுக்கத்திலும், இறையச்சத்திலும் சிறந்த தலைமுறையை உருவாக்கும் ஒளிவிளக்காக இந்நிறுவனம் என்றும் திகழ அருள் செய்வானாக! ஆமீன்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *