உள்நாடு

அம்பாறையில் சிறந்த சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சிறந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கௌரவம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகளின் மதிப்பீட்டு மீளாய்வுக்கூட்டம், சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில், ஏ.ஐ விக்கிரமசிங்க கேட்போர் கூடத்தில் (22) இடம்பெற்றது.

கடந்த வருடம் முதல் இவ்வருடம் வரை சிறப்பாக செயற்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் இருந்து சுமார் 25 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இதனடிப்படையில் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த எல்.சிலோஸினி முதலாம் இடத்தையும், தெகியதகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எம்.பாலித பண்டார இரண்டாம் இடத்தையும், பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ரீ.ஜெயந்திமலர் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள 45 சமுர்த்தி வங்கி முகாமையாளர்களில் இருந்து சுமார் 10 வங்கி முகாமையாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில் தமன பிரதேச செயலக தொட்டம வங்கி முகாமையாளர் எல். ஜி. சஜித் லியனகே முதலாம் இடத்தையும், தெகியத்தகண்டி பிரதேச செயலக மஹாவனாவல வங்கி முகாமையாளர் எச். கே.சுனேத்ரா இரண்டாம் இடத்தையும், காரைதீவு பிரதேச செயலக கரடித்தொட்டம் வங்கி முகாமையாளர் ரீ.நிசாந்தி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகல கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அனுபம மங்கல விக்ரமாரச்சி, அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ஜெகராஜன் உட்பட அம்பாறை மாவட்ட செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வங்கிச் சங்க முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், உள்ளாக கணக்காய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(ஏ.எச்.எம்.ஹாரீஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *