உள்நாடு

சாய்ந்தமருது லீடர் அஸ்ரபில் சுற்றாடல் சார் செயற்பாடுகள் முகாம்

2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் சுற்றாடல் சார் செயற்பாடுகள் திறனை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் சிறப்பு செயற்பாட்டு முகாம் (20) அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்ஸாரின் வழிகாட்டலில் நடைபெற்ற இம்முகாமை, தரம் 5 வகுப்பாசிரியர்களான எஸ்.எல். நவாஹிர் மற்றும் எம்.பி.எம். சிறாஜுதீன் ஆகியோர், ஏனைய ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வில் கல்முனை கல்வி வலய கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம். எச். றியாஸா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு முகாமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவர்களின் சுற்றாடல் சார் செயற்பாடுகளை பார்வையிட்டு அவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்த அவர், மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டினார்.

மேலும், சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் அண்மைக்காலமாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளிலும், இணைப்பாடவிதானப் போட்டிகளிலும் தொடர்ச்சியாகப் பெற்று வரும் சிறப்பான பெறுபேறுகள் பாடசாலையின் கல்வித் தரத்தை உயர்த்துவதாகக் குறிப்பிட்ட அவர், அதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு கல்முனை கல்வி வலயத்தின் சார்பில் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா அப்துல் மலீக், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ். எம். எம்.அன்ஸார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நூருல் ஹுதா உமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *