உள்நாடு

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அபிவிருத்தி குறித்து எதிர்வரும் வருடம் கருத்தில் கொள்ளப்படும்

கல்வி, தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர்
மாவட்டத்திற்கு ஒரு தொழில்நுட்ப கல்லூரியை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி இவ்வருடம் உள்வாங்கப்படாத போதிலும் அது குறித்து எதிர்வரும் வருடம் கவனத்தில் கொள்ளப்படும் என்று கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற ஆலோசனைக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலப்பை விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய உதுமாலப்பை எம்.பி, சம்மாந்துறையில் அமைந்திருக்கும் அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது தொழில்நுட்பக் கல்லூரியை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் 25 தொழிநுட்பக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்யும் விஷேட திட்டத்தில் இணைத்துக் கொள்ளுமாறும் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சிவில் பொறியியல் என்.வி.கியூ – 05, கட்டிட நிர்மாணம் என்.வி.கியூ – 06 ஆகிய இரு பாடநெறிகளையும் மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இக்கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சின் செயலாளர், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில் பொறியியல் என்.பி.கியூ – 05 மற்றும் கட்டிடக் நிர்மாணம் என்.வி.கியூ – 06 பாடநெறிகளுக்கு 2026 ஆண்டுக்கு போதுமான எண்ணிக்கையில் மாணவர் பதிவு இடம்பெறாதுள்ளது. அதனால் அக்கற்கைகளை அங்கு ஆரம்பிக்க முடியாத நிலை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *