உள்நாடு

“மக்களுக்காக மக்களை வலுப்படுத்தல்” எனும் தொனிப் பொருளில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி பட்டறை

மலையக மீள் கட்டமைப்புக்கான சிவில் சமுக கூட்டினைவும் இன்ஸ்டிடியூட் போர் பீப்பள் என்கேஜ்மென்ட் அன்ட் நெட்வேர்க்கிங் அமைப்பும் இணைந்து “மக்களுக்காக மக்களை வலுப்படுத்தல்” எனும் தொணிப்பொருளில் நீண்டகாலமாக மலையக தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டி ஊடகவியலாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறும் ஒரு பயிற்சிப்பட்டறை கடந்த சனிக்கிழமை (18) ராஜகிரிய சவுத் ஏசிய பார்ட்னர்சிப் சிறிலங்கா மண்டபத்தில் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் சுரேஸ் குமார் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது முதலாவது அமர்வில் மலையக தமிழரின் காணி மற்றும் வீட்டுரிமையும் பிரச்சினைகளும் எனும் தலைப்பில் சட்டத்தரணி சு.விஜயகுமார் சட்ட அடிப்படையில் ஒரு தெளிவூட்டலை வழங்கினார்.

இரண்டாவது அமர்வில் மலையக காணி உரிமை மற்றும் நடைமுறைச் சிக்கள்களும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பில் சிரேஸ்ட ஆய்வாளர் கௌதம் பாலேந்திரன் தெளிவூட்டலை வழங்கினார்.

இறுதியில் வளவாளர்களினால் வழங்கப்பட்ட விடயங்களுக்கு அமைவாக கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் மூன்று குழுக்கலாக பிரிந்து தத்தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்ததுடன் சந்தேகங்களுக்கு விளக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த வகையில் மலையக மக்களின் மேற்படி காணி மற்றும் வீடுகளைப் நிரந்தரமாக பெற்றுக் கொள்வதற்கான தெளிவூட்டல்களை மக்களுக்கு ஊடகங்கள் மூலம் வழங்குவதுடன் அரசாங்கம் அவர்களுக்கான சொந்த காணி மற்றும் வீடுகளை வழங்க வேண்டும் என்ற விடயங்களை மக்கள் அறிந்து கொள்ளச் செய்தல், தோட்ட நிருவாங்கள் அந்த மக்கள் மீது மேற்கொண்டு வரும் தடைகளையும் அவர்களின் உரிமைகளை மீறி அடக்கியாலும் நிலைமைகளை இல்லாது செய்தல் போன்ற விடயங்களையும் மக்களுக்கு அறியச் செய்வதுடன் தோட்டக் காணிகளை பெறுவதில் உள்ள சட்டச் சிக்கள்கள் மற்றும் அவற்றை அந்த மக்கள் பெற்றுக் கொள்வதற்கான சரியான வழிமுறைகளையும் முடியுமானவரை அவர்களுக்கு ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *