உள்நாடு

கொவிட்டினால் மரணமடைந்து தகனம் செய்யப்பட்டமுஸ்லிம்களின் பெயர், விபரங்களை வழங்குங்கள்; பாராளுமன்ற ஆலோசனைக்கூட்டத்தில் உதுமாலெப்பை எம்.பி

கொவிட் -19 பெருந்தொற்றால் மரணமடைந்து தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் பெயர் விபரங்களை வழங்குமாறு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேயரத்னவிடமே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றக்கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. அச்சமயமே அவர் இக்கோரிக்கையை விடுத்திருக்கிறார்.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றிய உதுமாலெப்பை எம்.பி மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் கொவிட் 19 பெருந்தொற்றால் இறந்த முஸ்லிம்களின் ஜனாசாக்கள் (பிரேதங்கள்) தகனம் செய்யப்பட்டன. கொவிட் 19 தொற்றால் இறப்பவர்களை அடக்கம் செய்ய முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் மாத்திரமல்லாமல் வைரஸ் தொடர்பான நிபுணர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதனை அடிப்படையாகக் கொண்டு கொவிட் தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யுமாறு இந்நாட்டின் முஸ்லிம் தலைவர்களும், முழு சமூகமும் அன்று கோரிக்கை விடுத்தது. இருந்தும் அன்றைய ஜனாதிபதி அக்கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாது தகனம் செய்யும் கொள்கையை முன்னெடுத்தமை யாவரும் அறிந்த உண்மை.

என்றாலும் கொவிட் பெருந்தொற்றால் மரணமடைந்து தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் பெயர், விபரங்கள் இற்றை வரையும் உத்தியோகபூர்வமாக வழங்கப்படாதுள்ளது. அவற்றைப் பெற்றுத் தர பொதுநிர்வாக உள்நாட்டலுவல், மாகாண சபைகள் உளளுராட்சி அமைச்சர் ஆவண செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *