மினுவங்கொடை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற தேசிய முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி
இலங்கை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், இஸ்லாமிய பொது வருடம் 1448 ஹிஜ்ரியை முன்னிட்டு முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்வு 2026.06.17 ஆம் திகதி புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் திரு. முனீர் முளப்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவந்திலக ஜயக்கொடி, மினுவாங்கொட நகர சபைத் தலைவர் ஜனக சேனவிரத்ன, மினுவாங்கொடை பிரதேச சபைத் தலைவர் அசங்க சஞ்சீவ, இலங்கை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இஸ்லாமிய புத்தாண்டின் வருகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், ஹிஜ்ரத்தின் வரலாற்றுப் பின்னணி, இஸ்லாமிய விழுமியங்கள், சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் தொடர்பான உரைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து புதிய ஹிஜ்ரி ஆண்டை வரவேற்கும் வகையில் விசேட பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.
முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக மற்றும் சமூக விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மினுவாங்கொடை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






(ஏ.சி பௌசுல் அலிம், ஐ.ஏ. காதிர் கான்)
